சவரக் கத்தியைக் கொண்டு 64 வயது மாதிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதாக ஷாம்ஷர் சிங் என்ற 24 வயது ஆடவர் மீது சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
மவுண்ட்பேட்டன் ரோட்டில் இருக்கும் நடையர் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்த மாதைத் தாக்கி அவரிடம் கொள்ளையடிக்க சிங் முயன்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அந்த மாதின் வாயை மறைத்து, சவரக் கத்தியைக் கொண்டு அவரது கழுத்திலும் முன்கையிலும் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த மாதுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது.
தாக்கப்பட்ட அந்த மாது சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கிடம் அந்த மாது பணம் எதையும் பறிக்கொடுக்கவில்லை என்றும் அந்த மாதின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, பேருந்திலிருந்து இறங்கிய அந்த மாது, எதிர்த்திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறி வீட்டிற்குச் செல்வதற்காக மேம்பாலத்தைக் கடந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை அணுகிய சிங், பணம் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டதைத் தொடர்ந்து அலறிய அந்த மாது, சிங்குடன் போராடினார்.
பின்னர் சிங் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் ஐந்து மணி நேரத்திற்குள் காவல்துறையினர் சிங்கை கைது செய்தனர்.
மனநலப் பரிசோதனைக்காக இரண்டு வாரங்களுக்கு சிங் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நவம்பர் 25ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

