தானா மேரா எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள 1 கி.மீ. நீள ரயில் மேம்பால பாதையையும் அதற்குக் கீழே உள்ள பகுதியையும் பசுமைப் பாதையாக மாற்ற முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அப்படி மாற்றப்படும் பாதையை சைக்கிளோட்டவும் காலார நடந்து செல்லவும் பயன்படுத்த முடியுமா என்பது பற்றி ஆராயப்படுகிறது.
கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் சீமெய் எம்ஆர்டி நிலையத்திற்கு செல்லும் அந்த மேம்பாலப் பகுதி 2026ல் செயலற்றுப் போய்விடும்.
அப்போது அந்தப் பாலத்திற்கு இணையாகச் செல்லும் வகையில் புதிய எம்ஆர்டி பாதை அமைக்கப்படும். பிறகு அந்த மேம்பாலப் பாதையை இடிப்பதற்குப் பதிலாக அதை 1 கி.மீ. நீளமுள்ள பசுமைப் பாதையாக மாற்றுவது யோசனை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஃபேஸ்புக்கில் நவம்பர் 3ஆம் தேதி தெரிவித்தார்.
அந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து அந்தப் பாலத்தைப் புதுமை யான வழியில் பயன்படுத்தும் யோசனை பிறந்ததாக திரு ஈஸ்வரன் கூறினார்.
மேலும் விவரங்கள் கிடைக்கும்போது பொதுமக்களை ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த மேம்பாலத்தைப் பசுமைப் பாதையாக மாற்றும் திட்டம் சாத்தியமா என்பதைக் கண்டறிய நிலப் போக்குவரத்து ஆணையம் தேசிய பூங்காக் கழகத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்பில் ஆலோசனை வழங்க முன்வரும்படி கேட்டு ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
"நாம் எப்போதுமே புத்தாக்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம். நம்முடைய போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை பசுமை வளமிக்கவையாக ஆக்குவது நம்முடைய நோக்கம்.
"ஆகையால், இதுபோன்ற மேலும் பல யோசனைகள் வரவேற்கப்படுகின்றன," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த ஒரு கி.மீ. மேம்பாலப் பகுதி அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் பிடோக் பூங்கா இணைப்புப் பாதைக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்கு கல்லூரிக்கும் இடையில் அமைந்து இருக்கிறது.
தானா மேரா எம்ஆர்டி நிலையத்தின் வடக்குப் பகுதியில் மூன்றாவது நடைமேடை கட்டப்படுவதால் அந்த மேம்பாலப் பகுதி தேவையில்லாத ஒன்றாகிறது.
அதோடு மட்டுமின்றி துவாஸ் லிங்கில் இருந்து பாசிர் ரிஸ் செல்லும் ரயில்களுக்கான நான்காவது பாதையும் அமைக்கப்படுவதும் அதற்குக் காரணம்.

