சிங்கப்பூர்வாசிகள் இப்போது அரசாங்க சுகாதார முன்பதிவு முறை ஒன்றின் மூலம் 850க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங் களில் சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்னதாக பதிவு செய்துகொள்ளலாம்.
அவர்கள் book.health.gov.sg/flu என்ற முகவரிக்குச் சென்று தங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் மருந்தகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பங்கெடுக்கும் மருந்தகங்கள், சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) இடம்பெற்றவையாகும். இந்தத் திட்டம் சிங்கப்பூரர்களுக்கு மானியத்துடன் கூடிய மருத்துவ, பல் பராமரிப்புச் சிகிச்சையை வழங்குகிறது.
தங்களுக்கு அருகே இருக்கும் பொது மருந்தகத்தைத் தெரிந்து கொண்ட பிறகு குடியிருப்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்த மருந்தகத்தில் தங்களை முன்பதிவு செய்யலாம்.
சளிக்காய்ச்சல் பாதிப்பையும் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் குறைத்துக்கொள்ள ஏதுவாக இந்த ஊசியை ஆறு மாதக் குழந்தைகள் முதல் யாரும் போட்டுக்கொள்ளலாம்.
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் போன்ற சளிக்காய்ச்சல் நோயால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ள பிரிவினர் இந்தத் தடுப்பூசி யைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து இருக்கிறது.
நெடுநாள் நோய்களுடன் கூடியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரும் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அது தெரிவித்து இருக்கிறது.
சாஸ் திட்ட தனியார் மருந்தகங்களில் மானியத்துடன் சிகிச்சை பெற தகுதி பெற்றிருக்கும் சிங்கப்பூரர்கள் இந்தத் தடுப்பூசிக்கு $9 முதல் $35 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆறு மாதம் முதல் ஐந்துக்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகளுக்கு முழு மானியம் அளிக்கப்படும். அதேபோல, மருத்துவப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஐந்து முதல் 17 வயது வரைப்பட்ட சிறார்களுக்கும் இந்தச் சலுகை உண்டு.

