அரிய வகை நோய்களுக்குச் செலவைப் பாராமல் மருத்துவ சிகிச்சைக்கான ஆதரவை அரசாங் கம் அளிக்க வேண்டுமா என்பது பற்றி மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
அத்தகைய சிகிச்சைகளின் ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது இன்னமும் நிச்சயமில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் லியோன் பெரேரா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த கேள்விக்கு நவம்பர் 8ஆம் தேதி எழுத்து மூலமாக அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரிய நோய் உதவி நிதி மூலம் இப்போது ஐந்து நோய்களுக்கான ஏழு வகை மருந்துகளுக்கு ஆதரவு அளிக்கிறது. இந்த நிதியுதவியைப் பெற 2021 ஏப்ரல் முதல் ஆறு நோயாளிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நிதி உதவுகிறது.
அந்த நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்க போதுமான அளவுக்கு நிதியில் பணம் இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

