ஆடவர் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு
சவரக் கத்தியைக் கொண்டு 64 வயது மாதிடம் கொள்ளையடிக்க முயன்றதாக ஷாம்ஷர் சிங் என்ற 24 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
மவுண்ட் பேட்டன் ரோட்டில் இருக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணிக்கு அந்த மாதைத் தாக்கி அவரிடம் கொள்ளை அடிக்க சிங் முயன்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பணம் இழப்பு இல்லை என்றும் அந்த மாதின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அணுமின்சக்தி மீது நாட்டம்
சிங்கப்பூரைப் பொறுத்தவரை அணுமின்சக்தி என்பது சாத்தியமற்ற ஒன்று என்று பத்து ஆண்டுகளுக்கு முன் கருதப்பட்டது. ஆனால் இப்போது நிலவரங்கள் பெரிதும் மாறி இருக்கின்றன. கரிமக்கழிவை அகற்ற உலக அளவில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரத்தில், அண்மைய காலத்தில் தொழில்நுட்ப நவீனங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவை காரணமாக, சிங்கப்பூர் இப்போது அணுமின்சக்தி பக்கம் தன் பார்வையைத் திருப்பி இருக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களில் பல்வேறு மேம்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. முன்பைவிட சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை, நிலப்பற்றாக்குறை உள்ள சிங்கப்பூருக்கு அணு மின்சக்தியை சாத்தியமான ஒன்றாக ஆக்கி இருக்கின்றன. இதைப் பொறுத்தவரை 1950களில் இருந்தே தொழில்நுட்பங்களை சிங்கப்பூர் கண்காணித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் மீது தாக்குதல்: கைது
கேலாங்கில் லோரோங் 22ல் அல்ஜுனிட் ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.30 மணிக்கு 26 வயது ஆடவர் ஒருவர் கத்தரிக்கோலால் 30 வயது ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே தாக்கி இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த ஆடவர் கைதாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
தாக்கப்பட்ட ஆடவர் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் அந்த 26 வயது ஆடவர் மீது சனிக்கிழமை குற்றம் சுமத்தப்பட இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

