பிள்ளைகள் தங்களது பெற்றோருக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை கொடுப்பதன் தொடர்பில் நேற்று நான்கு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
தங்களால் வருமானம் ஈட்ட இயலாத வயது முதிர்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளிடம் பராமரிப்புத் தொகை கோர பெற்றோர் பராமரிப்புச் சட்டம் இடமளிக்கிறது. பிள்ளைகளைத் துன்புறுத்திய, கைவிட்ட பெற்றோரும் இந்தப் பராமரிப்பைக் கோரலாம்.
இச்சட்டத்தை மறுஆய்வு செய்து வரும் பணிக்குழு நேற்று சட்டத்தில் செய்யப்பட வேண்டிய உத்தேச மாற்றங்களை அறிவித்துள்ளது.
பிள்ளைகளிடம் பராமரிப்புத் தொகை கோரும் முன், பெற்றோர் பராமரிப்புக்கான நடுவர் மன்றத்தின் அனுமதியை முதலில் பெற்றோர் பெறவேண்டும் என்பது முதலாவது உத்தேச சட்டத் திருத்தம்.
பராமரிப்புக்கான கோரிக்கை ஏன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை அப்போது பெற்றோர் தரவேண்டும்.
இந்த மாற்றம் மூலம் பெற்றோரால் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகள் அல்லது கைவிடப்பட்ட பிள்ளைகளின் மனவேதனை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்
படுகிறது.
கைவிடப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளை கட்டாய சமரசக் கூட்ட அமர்வுக்காகத் தொடர்புகொள்ளும் அதிகாரம் பெற்றோர் பராமரிப்புத் துறை ஆணையரிடம் வழங்கப்பட வேண்டும் என்பது மற்றொரு உத்தேச மாற்றம்.
பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும் அல்லது சமரசத்திற்கு விண்ணப்பிக்காத நிலையிலும் ஆணையர் இதனைச் செய்யலாம்.
இந்த மாற்றத்திற்கிணங்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டால், பெலாங்கி வில்லேஜ் அல்லது ஜாமியா முதியோர் இல்லம் போன்ற ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருக்கும் மூத்தோருக்கு மட்டுமே அது பொருந்தும். அல்லது ஆதரவற்றோர் இல்லங்களில் சேரத் தயாராக இருக்கும் மூத்தோருக்கு புதிய திருத்தம் பொருந்தும்.
இருப்பினும், அவர்கள் இதற்கு முன்னர் பொறுப்புள்ள பெற்றோர்
களாக இருந்திருப்பதும் அவர்
களுக்கு நிதி ஆதரவு வழங்கக்கூடிய நிலையில் பிள்ளைகள் இருப்பதும் அவசியம்.
இந்த மாற்றம் நடப்புக்கு வந்தால், இல்லங்களில் தங்கியிருக்கும் மூத்தோரின் பிள்ளைகளைத் தேடி அலையும் நேரமும் இரு
வரையும் சமரசப் பேச்சில் ஈடுபட வைக்கும் நேரமும் மிச்சமாகும் என்று புக்கிட் பாத்தோக் முதியோர் பராமரிப்பு இல்ல ஊழியர் ஏட்ரியன் இங் தெரிவித்தார்.
பணம் சம்பந்தப்படாத உத்தரவு களைப் பிறப்பிக்க நடுவர் மன்றத்தை அனுமதிப்பது பணிக்குழு அறிவித்துள்ள மற்றோர் உத்தேச மாற்றம். உதாரணமாக, சூதாட்டப் பித்து அல்லது இதர பழக்கங்களுக்கு அடிமையான பெற்றோரை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்.
பராமரிப்புத் தொகை தரத் தயாராக இருந்தாலும் அந்தத் தொகை மீண்டும் சூதாட்டம் போன்ற தவறான வழிகளுக்குச் சென்றுவிடுமோ என்று அஞ்சும் பிள்ளைகளுக்கு இந்த மாற்றம் ஒரு வரப்பிரசாதமாக அமையலாம் என்று நடுவர்மன்றத்தின் சமரச நிபுணரான ஜென்சன் லீ தெரிவித்துள்ளார்.
மன்றத்தில் அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் இடம்பெற்று இருப்
பதால் சூதாட்டப் பழக்கங்களின் தீமைகளையும் அவற்றால் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்களையும் பெற்றோருக்கு நன்கு புரிய வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
முக்கியமற்ற, அலைக்கழிக்கக் கூடிய விண்ணப்பங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை நடுவர் மன்றம் பெறவேண்டும் என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ள நான்காவது உத்தேச மாற்றம்.

