தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மூன்றாம் கட்டத்தில் இடம்பெற்றுள்ள 11 எம்ஆர்டி நிலையங்கள் நேற்று அதிகாரபூர்வ சேவையில் ஈடுபடத் தொடங்கின.
ஸ்டீவன்ஸ், நேப்பியர், ஆர்ச்சர்ட் பொலிவார்ட், ஆர்ச்சர்ட், கிரேட் வேர்ல்ட், ஹேவ்லாக், ஊட்ரம் பார்க், மேக்ஸ்வெல், ஷெண்டன் வே, மரினா பே, கார்டன்ஸ் பை த பே ஆகியன அந்த நிலையங்கள். இந்தப் புதிய எம்ஆர்டி நிலையங்களுக்கு நேற்று ஏராளமானோர் வந்தனர். பயணம் செய்ததோடு ரயில்களையும் நிலையங்களையும் அவர்கள் படம் எடுத்தனர்.
சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓங் யி காங் தமது இரு சக நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்ரம் நாயர், திருவாட்டி போ லி சான் ஆகியோருடன் புதிய ரயில் தடத்தில் பயணம் செய்தார்.
உட்லண்ட்ஸ் சௌத்துக்கும் மேக்ஸ்வெல்லுக்கும் இடையிலான நிலையங்களுக்கு அவர்கள் சென்று சுற்றிப் பார்த்தனர்.
இந்தப் புதிய வழித்தடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னோட்ட ரயில் சேவை இடம்பெற்றது. 11 எம்ஆர்டி நிலையங்
களுக்கு இடையில் இலவச ரயில் சேவை அளிக்கப்பட்டது.
அதனை கிட்டத்தட்ட 500,000 பேர் பயன்படுத்தியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் முதற்கட்டத்தில் இடம்பெற்ற மூன்று ரயில் நிலையங்கள் 2020 ஜனவரியில் திறக்கப்பட்டன.

