நீ சூன் சௌத் வட்டாரத்தில் வசிக்கும் பராமரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு புதிய நிலையம் ஒன்று திறக்கப்பட இருக்கிறது. தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதோடு நடப்பில் உள்ள திட்டங்களிலும் பங்கேற்க இந்தப் புதிய நிலையம் அவர்
களுக்கு உதவும்.
இதுபற்றிய அறிவிப்பை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தமது நீ சூன் செளத் தொகுதிக்கான அமைச்சர்நிலை சமூக வருகையின்போது வெளியிட்டார்.
ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 839ல் புதிய தகவல் உதவி நிலையம் அமைய இருப்பதாக அவர் கூறினார். பின்னர் ஏழு பராமரிப்பாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
மூத்த பெற்றோரைப் பராமரிக்கும் இளையர்களும் அவர்களுள் அடங்குவர். நினைவாற்றல் குன்றிய, மனச்சோர்வடைந்த குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்போரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக் கொள்வோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும் நோக்கக் குழு விவாதக் கூட்டங்களில் ஏற்கெனவே கலந்துகொண்டனர். உதவித்தொகை மற்றும் உதவித் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் சிரமம் எதிர்நோக்குவதாக பராமரிப்பாளர் கருத்துரைத்ததாக இந்த விவாதக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் தொண்டூ ழியரான டாக்டர் ஜெனிடின் லிம், 63, தெரிவித்தார்.
நோக்கக் குழு விவாதக் கூட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், விவாதங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புதிய உதவி நிலையம் அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
எஸ்ஜி அஸிஸ்ட் என்னும் சமூக நிறுவனத்தின் உதவியுடன் புதிய நிலையம் இயங்கும்.
அமைச்சர்நிலை சமூக வருகைகள் ஈராண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை ஏறக்குறைய 20 தொகுதிகளில் வருகைகள் நீடிக்கும்.

