கல்வி ஆண்டை எதிர்நோக்கியிருக்கும் வசதிகுறைந்த குடும்ப மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுகள் தந்து உதவும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் (சிண்டா) 'பேக் டு ஸ்கூல்' திட்டத்தில் இவ்வாண்டு 7,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
கடந்த ஆண்டைவிட 80 விழுக்காடு கூடுதலான மாணவர்கள் பலன்பெற்றுள்ளனர். சிண்டா வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கை யிலான மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு உள்ளது.
பிரோட்ரிக் உயர்நிலை பள்ளியில் இடம்பெற்ற 'பேக் டு ஸ்கூல்' விழாவை தொடங்கி வைத்த சிண்டாவின் தலைவர் இந்திராணி ராஜா, "ஒருவருக்கொருவர் உதவு வதே சிங்கப்பூரின் ஒற்றுமைப்பாட்டை வலுப்படுத்தும். ஒவ்வொரு சிங்கப்பூரரும் செழிக்கக்கூடிய, வெற்றிகளைத் தழுவக்கூடிய ஒன்றுபட்ட எதிர்காலம் கொண்டதொரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நமது அனைத்து முயற்சிகளின் தலையாய நோக்கம் ஆகும்," என்றார்.
உதவி தேவைப்படுவோர் சிண்டா போன்ற சமூக அமைப்புகளுடன் அரசாங்க அமைப்புகளையும் தொடர்புகொள்ளுமாறு பிரதமர் அலுவலக அமைச்சரான இந்திராணி ராஜா கேட்டுக்கொண்டார்.
தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சருமான அவர், 'பேக் டு ஸ்கூல்' முயற்சியானது மாணவர்களின்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவுவதில் சிண்டா கொண்டுள்ள நீண்டகால ஈடுபாட்டையும் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் 'பேக் டு ஸ்கூல்' உதவி நடவடிக்கை மூலம், எழுதுபொருள்கள், பள்ளி காலணிகளுக்கான பற்றுச்சீட்டுகளை மாணவர்கள் பெறுவர். இவ்வாண்டு $140 மதிப்பிலான எழுதுபொருள் பற்றுச்சீட்டுகளும் $60 மதிப்பிலான காலணி பற்றுச்சீட்டுகளும் கொண்ட உதவிப் பொட்டலங்கள், டிசம்பர் 4 வரை ஒன்பது நாள்களில் வெவ்வேறு இடங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். பற்றுச்சீட்டுகளை தருவது மட்டுமல்ல பேக் டு ஸ்கூலின் நோக்கம் என்று கூறிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களை வெற்றியாளர்களாக உயர்த்துவதும் நோக்கம் என்றார்.
மூன்றாவது முறை 'பேக் டு ஸ்கூல்' பள்ளி உதவி பற்றுச்சீட்டுகளைப் பெறும் 17 வயது வெங்கடேசன் பாரதி கண்ணனுக்கும் அவரது தங்கை வெங்கடேசன் ஜீவஜோதிக்கும் அடுத்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். முறையே, ஏ நிலை, ஓ நிலை தேர்வுகளை எழுதவிருக்கும் இருவருக்கும் இப்பற்றுச்சீட்டுகள் கூடுதலான பாடநூல்களை வாங்க உதவும்.
இவ்வாண்டு சிண்டாவால் புதிதாகக் கண்டறியப்பட்ட 3,300 மாணவர்கள் அதன் கல்வி, மேம்பாட்டுத் திட்டங்களால் பயனடையவுள்ளனர்.
அடுத்த ஆண்டு இளையர் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தவிருக்கும் சிண்டா, புதிய திட்டங்களை செயல்படுத்தவும் தற்போதைய திட்டங்களை மெருகூட்டவும் $1.5 மில்லியன் கூடுதலாக முதலீடு செய்து, மொத்தமாக $12.3 மில்லியன் செலவிடவுள்ளது.

