சிங்கப்பூரர்கள் அடுத்த ஆண்டு முதல், சிங்கப்பூரின் மரபுடைமையைப் பறைசாற்றும் பழைய கட்டடங்களின் புதுப்பிப்புப் பணியை அருகில் சென்று பார்வையிட இயலும்.
எடுத்துக்காட்டாக, எண் 141, நீல் ரோட்டில் அமைந்துள்ளது 1880ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு வீடு.
இதன் பழைய தோற்றத்தை மீட்டெடுக்கும் பணியைப் பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நடவடிக்கை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கற்றல், ஆய்வு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளையும் வழங்கும் என்று கூறப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைத் துறை நேற்று இந்தப் பழங்கால வீட்டில் 'ஆர்க்லேப்' எனப்படும் கட்டடக்கலைப் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தைத் திறந்துள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதில் கலந்துகொண்டார்.
மரபுடைமையைப் பாதுகாத்துச் செய்யப்படும் மெருகூட்டும் பணிகள் 2027ஆம் ஆண்டில் நிறைவடையும்.
போர்ட்டபெல்லா குடும்பம், தேசியப் பல்கலைக்கழகத்திற்கு இந்தக் கட்டடத்தை நன்கொடையாக வழங்கியதுடன் இதன் பழுதுபார்ப்புச் செலவுக்காக இரண்டு மில்லியன் வெள்ளியும் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் பணி வரலாற்று வளங்களை நிர்வகிப்பதற்கான செயல்திறனுக்குப் பங்களிக்கும் எனக் கருதப்படுகிறது.

