பிரான்சைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான 'ஷ்னைடர் எலக்டிரிக்', நேற்று சிங்கப்பூரில் அதன் தளவாட நடுவத்தைத் திறந்துள்ளது.
துவாஸ் பெருந்துறைமுகத்துக்கு அருகே துவாஸ் சௌத் பகுதியில் 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.
'ஹப் ஏஷியா' எனப்படும் இந்த நடுவத்தில் அடுத்த பத்தாண்டில் 110 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய கட்டடத்தில் அறிவார்ந்த செயல்பாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன. இங்கு 280 பேர் வேலை செய்கின்றனர்.
உலகெங்கும் உள்ள ஏறக்குறைய 400 வாடிக்கையாளர்களுக்கு இந்த நடுவம் சேவை வழங்குகிறது.
முன்னர் பெஞ்சுருவில் செயல்பட்டுவந்த இந்த நடுவம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்து காலி செய்யப்பட்டது.
புதிய வளாகத்தில் கூடுதல் இடவசதி இருப்பதாகவும் கட்டுப்பாடுகள் குறைவு என்றும் நிறுவனம் கூறியது.
பழைய இடத்தில் உயர வரம்புகளும் அதிகமான தூண்களும் இருந்ததாக அது குறிப்பிட்டது.
புதிய இடத்துக்கு மாறியதால் நிறுவனத்தின் சில செயல்பாடுகளை மின்னிலக்கப்படுத்த முடிந்திருப்பதாகவும் செயல்திறனை அதிகரிக்க, தரவுகளைப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. புதிய இடத்தில் சூரிய சக்தித் தகடுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

