அல்ஜுனிட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் கூடைப்பந்து நிலையத்தில் சென்ற சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் தேசிய கூடைப்பந்துப் போட்டியின்போது அரங்கில் இருந்த பெரிய மின்விளக்கு நொறுங்கியதால் போட்டியை நிறுத்த நேரிட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
ராடின் மாஸ் சிஎஸ்சி அணியும் சிக்லாப் வொய்ட் அணியும் பொருதிய ஆட்டத்தின் நான்காவது பகுதியில் ராடின் மாஸ் அணி 43-47 எனும் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தபோது விளக்கு தரையில் விழுந்து நொறுங்கியது.
சம்பவம் நடந்த அரங்கம் 'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்புக்குச் சொந்தமானது. தேசிய அளவிலான பயிற்சிக்கும் லீக் போட்டிகளுக்கும் சிங்கப்பூர் கூடைப்பந்துச் சங்கம் இதை குத்தகைக்கு எடுத்துள்ளது.
திடீரென்று நிறுத்த நேரிட்ட ஆட்டத்தை மீண்டும் தொடர்வதற்கு உரிய இடம் குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது.

