குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ விரும்பும் பயணிகள், நவம்பர் 14 முதல் டிசம்பர் 31 வரை எம்ஆர்டி ரயில், பேருந்து நிலையங்களில் ஈசி-லிங்க் அட்டைகள் மூலம் நன்கொடை கொடுக்கலாம்.
தேசிய சமூக சேவை மன்றம் மற்றும் ஈசி-லிங்க் நிறுவனத்துடன் இணைந்து, எஸ்எம்ஆர்டி நிறுவனம், 'டாப் ஃபோர் ஹோப்' 2022 என்ற முன்னோடித்திட்டத்தின் ஒரு பகுதியாக, எட்டு எம்ஆர்டி ரயில் நிலையங்கள் மற்றும் இரண்டு பேருந்து நிலையங்களில் நன்கொடை நிலையங்களை அமைத்து உள்ளது.
அந்த நன்கொடை நிலையங்களில் பயணிகள் தங்களின் ஈசி- லிங்க் அட்டைகளைத் தட்டுவதன் மூலம் நன்கொடைகளை வழங்கலாம். ஒவ்வொரு முறைக்கும் $2 நன்கொடை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கியூஆர் குறியீடு மூலமும் நன்கொடை கொடுக்கலாம்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை ஆதரிப்பது இந்த ஆண்டு அதிபர் சவாலின் இலக்காக உள்ளது. ஏனெனில் அவர்கள் தொற்றுநோயின் தாக்கங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பீஷான், பூகிஸ், சிட்டி ஹால், ஹார்பர் ஃபிரண்ட், ஜூரோங் ஈஸ்ட், பாய லேபார், சிராங்கூன், உட்லண்ட்ஸ் ஆகிய அதிக பயணிகள் வந்து செல்லும் எம்ஆர்டி நிலையங்களில் பயணிகள் நன்கொடை வழங்கலாம்.
நன்கொடை நிலையங்கள் சுவா சூ காங் பேருந்து நிலையத்திலும் உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நடுவத்திலும் இருக்கும்.
ஏழு வார காலகட்டத்தில் திரட்டப்படும் நிதி 82 சமூக சேவை நிறுவனங்களின் பயனாளிகளை ஆதரிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

