ஊக்க மருந்து உள்ளிட்ட மருத்து வப் பொருள்கள் கலந்திருக்கக்கூடிய மாத்திரைகளைப் பயன்படுத்திய இருவருக்குப் பாதக விளைவுகள் ஏற்பட்டு இருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆல்ஃபாமிராக்ஹெர்ப்ஸ், ஷு ஜின் குப்பி மாத்திரை, ஜோலிகேர் குழந்தை பசை ஆகியவற்றை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆணையம் விழிப்பூட்டி இருக்கிறது.
அவற்றை யாராவது பயன்படுத்தி இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றும் அது ஆலோசனை கூறி இருக்கிறது.
ஆல்ஃபாமிராக்ஹெர்ப்ஸ், ஷு ஜின் குப்பி மாத்திரை இரண்டும் மலேசியாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.
ஜோலிகேர் பசை உள்ளூர் இணைய வர்த்தகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் விற்கப்படுகின்றன.
இத்தகைய தளங்களை நிர்வகிப்போருடன் இந்த ஆணையம் தொடர்புகொண்டு அவற்றை விற்பனையிலிருந்து விலக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
விற்பனையாளருக்கு எதிராக புலன்விசாரணை நடப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

