ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் டிசம்பரில் $700 வரை பெறுவர்

ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் டிசம்பரில் $700 வரை பெறுவர்

2 mins read
479ee4e7-56e4-4ad3-920d-6ae4c12410f2
-

பொருள் சேவை வரி உயர்வின் பாதிப்பையும் உயரும் வாழ்க்கைச் செலவினத்தையும் ஈடுகட்ட மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் உதவித் தொகுப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, சுமார் 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் வரும் டிசம்பரில் $700 வரை பெறுவர்.

இரண்டு வெவ்வேறு திட்டங்களுக்காக அந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. ஒரே முறை வழங்கப்படும் வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகையாக சுமார் 2.5 மில்லியன் சிங்கப்பூர் பெரியவர்கள் 500 வெள்ளி வரை பெறுவர். இத்தொகை அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட $1.5 பில்லியன் மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதை அறிவித்திருந்தார்.

அத்துடன், சுமார் 2.9 மில்லியன் சிங்கப்பூர் பெரியவர்களுக்கு, உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் $200 வரையிலான ரொக்கப் பணம் வழங்கப்படவுள்ளது.

பணவீக்கம் தற்போது இருக்கும் சூழலிலும், பொருள் சேவை வரி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஐந்தாண்டுகளுக்கு ஈடுகட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு உதவும். குறைந்த வருமானக் குடும்பங்கள் பத்தாண்டுகளுக்குக் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க திட்டம் உதவும் என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது.

இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை முதல் கட்ட உதவித் தொகை வழங்கப்படும்.

உத்தரவாத உதவித் திட்டத்தில் கூடுதலாக $1.4 பில்லியன் செலுத்தப்படும் என்று திரு வோங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். முன்னதாக $6.6 பில்லியனாக இருந்த அத்தொகை, $8 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது. அது குறித்த விவரங்கள் 2023 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் தகுதிபெற்ற குடும்பங்கள் வழக்கமாக பெறும் யு-சேவ் தள்ளுபடிக்கும் மேலாக, பொதுப் பயனீட்டுக் கட்டண அதிகரிப்பை ஈடுகட்ட, $95 வரையிலான கூடுதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யு-சேவ் கட்டணக் கழிவைப் பெறும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இது வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் $300 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளைப் பெறவுள்ளன. இத்திட்டத்தில் பங்கேற்கும் அக்கம்பக்கக்கடைகள், உணவங்காடிக் கடைகள், பேரங்காடிகள் ஆகியவற்றில் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வரும் 2023 பிப்ரவரியில் குறைந்த வருமானமுள்ள சிங்கப்பூர் முதியவர்கள் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ரொக்கம் (முதியவர்களுக்கான போனஸ்) திட்டத்தின்கீழ், $300 வரையிலான ரொக்கத்தொகையைப் பெறுவர். அதனுடன், தகுதிபெற்ற 55 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள சிங்கப்பூரர்கள், 20 அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிங்கப்பூரர்கள் ஆகியோருக்கு உத்தரவாதத் தொகுப்பு மெடிசேவ் திட்டத்தின்கீழ், தங்கள் மத்திய சேம நிதி மெடிசேவ் கணக்கில் $150 செலுத்தப்படும்.