தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகராறு, தாக்குதல்: பயணிக்கு தடை விதித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read
dff7d9f2-504b-49e0-9fe9-d9aa5d9b6004
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தகராறு செய்த பயணி. படம்: சமூக ஊடகக் காணொளி -

விமானத்தினுள் மூர்க்கத்தமாக நடந்துகொண்ட ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அனைத்து விமானங் களிலும் பயணம் செய்ய இயலாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பயணிகளுக்கான பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பேங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்க்யூ711 விமானத்தில் உணவு பரிமாறப்பட்டபோது அவர் தகராறு செய்ததோடு மீண்டும் மீண்டும் மதுபானம் கேட்டு விமான ஊழியர்களைத் தொல்லைப்படுத்தினார். அவர் எல்லைமீறி நடந்து கொண்டது காணொளியில் தெரிந்தது.

விமான ஊழியர்களிடம் அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் துணைக் காவற்படையிடம் அந்த ஆடவர் ஒப்படைக்கப்பட்டார்.

கோபன்ஹேகன் இணைப்பு விமானத்தில் அவர் பயணம் செய்ய வேண்டும். இனி தகராறு செய்யமாட்டேன் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து கடும் எச்சரிக்கைக்குப் பின் இணைப்பு விமானத்தில் பயணம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், எஸ்க்யூ352 என்னும் அந்த விமானத்தில் ஏறியதும் அவர் மீண்டும் மூர்க்கத்தனமாக நடந்து விமான ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், பயணத் தடை விதிக்கப்பட்ட அந்த ஆடவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.