சம்பளம் அதிகம் கூடினாலும் விலைவாசி விழுங்கிவிடும்

சம்பளம் அதிகம் கூடினாலும் விலைவாசி விழுங்கிவிடும்

2 mins read
c8aa83db-dcae-41bb-bbd5-98af27c9b9ba
-
Google News Preferred Icon

'2023ல் மொத்த ஊதியம் 5% வரை ஏறும்; உண்மையான சம்பளம் 2022ல் 2.95% இறங்கும்'

சிங்கப்பூரில் இடம்பெறும் ஊழியர்களின் சம்பள உயர்வு கொவிட்-19க்கு முந்திய நிலையைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஊழியர்களின் உண்மையான ஊதியத்தைப் பணவீக்கம் ஜீரணித்துவிடும் என்று நேற்று வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 3.75 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022ல் 3.65% ஆக இருக்கிறது. 2019ல் 3.6% ஆக இருந்தது.

மெர்சர் சிங்கப்பூர் என்ற ஆலோசனை நிறுவனம் அந்த ஆய்வை நடத்தியது. அந்த வருடாந்திர ஆய்வில் 18 தொழில்துறைகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டன.

தளவாடப் போக்குவரத்து தொழில்துறையில்தான் ஆக அதிக சம்பள உயர்வு இடம்பெறுகிறது.

வங்கி, நிதித்துறை, உயர் தொழில்நுட்பத் துறை ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன. இதற்கு மாறாக, நிலச் சொத்து தொழில்துறையில்தான் ஆகக் குறைவான சம்பள உயர்வு இடம்பெறுகிறது.

இதனிடையே, இந்த நிலவரம் பற்றி கருத்து தெரிவித்த மெர்சர் சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி மான்சி சபர்வால், அடுத்த ஆண்டில் மொத்த சம்பளப் பட்டியல் 5% வரை கூடும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பு, கொவிட்-19க்கு முன்பு 4.7% ஆக இருந்தது. இதை வைத்துப் பார்க்கையில் நிறுவனங்கள் அதிகம் செலவிடத் தயாராக இருப்பததாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆண்டு அடிப்படையில் தகுதியை வைத்து அதிக சம்பள உயர்வைத் தருவதோடு மட்டுமின்றி இடையாண்டு பதவி உயர்வையும் சந்தைக்கு ஏற்ற சரியாக்கங்களையும் செய்ய அவை ஆயத்தமாக இருக்கின்றன என்றார் அவர்.

இருந்தாலும் சிங்கப்பூரில் அதிக பணவீக்கம் நிலவுவதால் இந்த ஆண்டில் ஊழியர்களின் உண்மையான சம்பளம் 2.95% குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை இருந்தாலும் இங்கு 22% நிறுவனங்கள் மட்டுமே பணவீக்கத்தைச் சமாளிக்கும் வகையில் சம்பளத் தொகையை உயர்த்துகின்றன. மேற்கொண்டும் சரியாக்கங்களைச் செய்ய கிட்டத்தட்ட பாதி நிறுவனங்களிடம் அதாவது 45% நிறுவனங்களிடம் திட்டம் எதுவும் இல்லை.

அடுத்த ஆண்டு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருந்து பார்த்து அதற்கேற்ப அடுத்த ஆண்டு பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு சம்பள உயர்வை நிர்ணயிக்க 54% நிறுவனங்கள் விரும்புகின்றன.

நிறுவனங்கள் உலகளாவிய திறனாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன.

பதவியை விட்டு விலகுவோர் அதிகமாக இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இந்த ஆண்டு முடிவில் தன்னிச்சையாகப் பதவி விலகும் விகிதம் 15.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கொவிட்-19க்கு முன்பு 12% ஆக இருந்தது.

திறனாளர்களைக் கவர்ந்து தக்கவைத்துக் கொள்ள சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் 9.6% வரைப்பட்ட பதவி உயர்வுடன் கூடிய அதிக சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளன.

ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தோதாக அவர்களின் சிறப்பு தேர்ச்சிகளைப் பொறுத்த ஊக்கத்தொகை வழங்கவும் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.