அனுஷா செல்வமணி
பல இன, பல சமய மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேலாங் சிராய் சமூக மன்ற தீபாவளிக் கொண்டாட்டம் இம்மாதம் 12ஆம் தேதி யூனோஸ் ரோடு புளோக்415ன் கூடைப்பந்து அரங்கில் நடந்தது.
ஏறக்குறைய 220 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தீபாவளிப் பண்டிகையை மற்ற இனத்தவர்களும் நன்கு தெரிந்து கொண்டு அதைக் கொண்டாடி மகிழ்வது சிங்கப்பூரின் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கருத்து கூறினார்.
கேலாங் சிராய் சமூக மன்றத் தைச் சேர்ந்த சீன, மலாய் நடனக் கலைஞர்கள் இந்தியப் பாரம்பரிய இசைக்கு ஆடிய நடனங்களும் மயிலாட்டம், பங்ரா நடனம் முதலானவையும் சிறப்பாக அரங்கேற்றம் கண்டன.
இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றி மற்ற இனத்தவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வேட்டி கட்டும் போட்டியும் பார்வையாளர்கள் அனைவருக்குமான சிறந்த ஆடை போட்டியும் நடத்தப்பட்டன.
இந்திய சைவ, அசைவ உணவு, தின்பண்டங்கள் சீன, மலாய் பாரம்பரிய உணவுகளையும் பார்வையாளர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
'ப்ரஷ் சொசைட்டி' என்ற அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் பார்வையாளர்களின் முகத்தை உடனுக்குடன் வரைந்து கொடுத்து அசத்தினர். ஸ்டீபன் யூங் என்ற சீனக் கலைஞர் தமிழ்ப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.
கேலாங் சிராய் சமூக மன்றத்தின் துணைத் தலைவர் திரு மாலிக், "கொவிட்-19 கொள்ளைநோய்க்குப்பின், அனைத்து இன மக்களையும் இணைக்கும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தந்தது என்றார்.

