தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) அதனுடன் இணைந்த அமைப்புகளும் விநியோகத்தள ஊழியர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்று குரல்கொடுத்து இருக்கின்றன.
நீண்டகாலப்போக்கில் நிதிப் பாதுகாப்பு, மருத்துவ ஆதரவு, காயமடையும்போது செலவை ஈடுசெய்வதற்கான உத்தரவாத ஏற்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அவர்களுக்குத் தேவை என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
என்டியுசி, தேசிய டாக்சி சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை அத்தகைய ஊழியர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூட்டு செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளன.
இத்தகைய ஊழியர்கள் நீண்ட கால தேவைகளுக்குத் திட்டமிடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். பொதுவாக இவர்களுக்கு மிதமான வருமானம்தான் கிடைக்கிறது.
தங்களின் சேவைக்குரிய கட்டணத்தை இவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அத்தகைய விநியோகத் தளங்களை நடத்தும் நிறுவனங்கள்தான் கட்டணங்களைத் தீர்மானிக்கின்றன என்று அறிக்கையில் தொழிற்சங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விநியோகத் தளங்களை நடத்தும் நிறுவனங்கள் தங்களுடைய இத்தகைய ஊழியர்களுக்காக மத்திய சேம நிதிச் சந்தாவை செலுத்த தேவையில்லை.
இவர்கள் ஊழியர்களாக கருதப்படாததே இதற்கான காரணம்.
விநியோகத்தள அடிப்படையில் செயல்படும் ஊழியர்கள் மத்திய சேம நிதிச் சந்தாவைச் செலுத்த வேண்டும் என்றால் அதை சொந்தமாக தாங்களாகவே செலுத்த வேண்டும் என்பதை நேற்று தொழிற்சங்க அமைப்புகள் சுட்டிக்காட்டின.
இதன் காரணமாக இத்தகைய சில ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களின் மசே நிதியில் போதிய பணம் இல்லை.
விநியோகத்தள ஊழியர்களும் அத்தகைய தளங்களை நிர்வகித்து நடத்துவோரும் மத்திய சேம நிதியைச் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று.
இப்படி செய்தால்தான் இத்தகைய ஊழியர்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்ற போதிய நிதிவளம் இருக்கும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.
குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ள விநியோகத்தள ஊழியர்களின் வருவாய்க்கு நீண்டகால ஆதரவு வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டு உள்ளன.
இதன் மூலம் அவர்களுடைய வருவாய்க்கு ஆதரவு கிடைக்கும் என்றும் நீண்டகால நிதிவளம் பலப்படும் என்றும் அவை தெரிவித்துள்ளன.
இத்தகைய ஊழியர்களின் அக்கறைக்குரிய அம்சங்கள் எடுத்துக் கூறப்பட்டு அவை தொடர்பில் பேச்சு நடத்தப்பட ஏதுவாக விநியோகத்தள ஊழியர்கள் நன்கு பிரதிநிதிக்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

