மலேசியாவின் ஈப்போவைச் சேர்ந்த ஒரு மாது, சிங்கப்பூரைச் சேர்ந்த கடன் முதலைகள் தன் காரைத் தீ மூட்டி கொளுத்திவிட்டதாகக் கூறுகிறார்.
தன்னுடைய குடும்பத்தை அலைக்கழிப்பதை நிறுத்தும்படி அந்த 42 வயது மாது கடன் முதலை களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
திருவாட்டி யிப் என்று மட்டும் தன் பெயரைக் குறிப்பிட விரும்பிய ஈப்போ மாது, தன்னுடைய காரில் ஒரு கடிதத்தைக் கண்டதாகத் தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தில் சிங்கப்பூருக்குரிய எண்ணுடன் கூடிய இரண்டு தொலைபேசி எண்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
"அந்தக் கடிதம் தன்னுடைய கணவரின் சகோதரி பெயருக்கு எழுதப்பட்டு இருந்தது.
"அந்த உறவினருக்கும் கடன் முதலைகளுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கும்போல் தெரிகிறது.
"இதன் காரணமாக நாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம்," என்று ஈப்போ மாது தெரிவித்தார்.
கடன் வாங்கியவர்கள் தாங்கள் அல்ல என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த தாங்கள் விரும்புவதாக அந்த மாது ஈப்போவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அந்தக் கூட்டத்திற்கு ஈப்போ மேற்கு மலேசியச் சீனர் சங்க ஒருங்கிணைப்பாளரான லோ கோ நான் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தைக் காவல்துறை கவனித்துக்கொள்ளும் என்று திருவாட்டி யிப்பின் குடும்பத்திடம் திரு லோ உத்தரவாதம் கூறியிருக்கிறார்.
இதனிடையே, திருவாட்டி யிப்பின் மாமியாரான திருவாட்டி செங், தன்னுடைய புதல்வியின் காதலர் சிங்கப்பூரைச் சேர்ந்த கடன் முதலையிடம் இருந்து பணம் கடன் வாங்கியதாகக் கூறினார்.
கடந்த 20 ஆண்டு காலமாக தன்னுடைய புதல்வி இங்கு வசிக்கவில்லை என்றும் ஆகையால், தாங்கள் அப்பாவிகள் என்றும் அந்த மாது கூறினார்.
வீட்டில் வசிக்கும் தன்னுடைய நான்கு பேரப்பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தனக்குக் கவலை ஏற்பட்டுவிட்டதாகவும் திருவாட்டி செங், 62, மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிங்கப்பூரைச் சேர்ந்த கடன் முதலைகள் ஈப்போவில் உள்ள குடும்பங்களை அலைக்கழிக்கும் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக திரு லோ கூறினார்.
சென்ற மாதம்கூட குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று புகார்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

