மறுவடிமைக்கப்பட்ட வேலைகளில் சில்லறை விற்பனைத் துறை ஊழியர்கள் பயிற்சிபெறுவதற்கான திட்டம், புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பயிற்சிக்காலத்தில் அந்த ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு நிதியாதரவு வழங்கப்படும்.
இப்போதைய ஊழியர்கள் மறுதேர்ச்சி பெற அல்லது மின்வணிகம், விளம்பரம், தரவு, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மறுவடிவமைக்கப்பட்ட வேலைகளில் அமர்த்தப்படும் புதிய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சில்லறை விற்பனைத் துறைக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்கும் சில்லறை விற்பனை நிறுவனங்கள், சிங்கப்பூர் ஊழியரணியிடமிருந்து ஆறு மாதங்கள் வரையிலும் சம்பள ஆதரவு பெறலாம்.
கடந்த 2020ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டபோது தற்போது வேலையிலிருக்கும் ஊழியர்கள் மட்டுமே அதன்கீழ் இடம்பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்மூலம் சில்லறை விற்பனைத் துறையைச் சேர்ந்த 250 ஊழியர்கள் பயனடைவர் என எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தெரிவித்தது.
நேற்று இடம்பெற்ற 'சிங்கப்பூர் சில்லறை விற்பனைத் துறை மாநாடு, கண்காட்சி 2022' நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட திட்டம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் திட்டம் தொடர்பில், சிங்கப்பூர் ஊழியரணியின் பங்காளியாக சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் செயல்படும்.
ஹுவோன் ஈவென்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, "வாழ்க்கைத்தொழிலில் முன்னேற நல்ல வாய்ப்புகளை வழங்கும் வகையில் சில்லறை விற்பனைத் துறையை அர்த்தமுள்ளதொரு வாழ்க்கைத்தொழிலாக மாற்ற வேண்டியது அவசியம்," என்றார்.
வேலைகளை மறுவடிவமைத்து, மேம்படுத்தவும் தங்கள் ஊழியர்கள் புதிய தேர்ச்சிகளைப் பெறச் செய்யவும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் உதவும் என்றும் திரு ஸாக்கி சொன்னார்.
புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்கீழ், புதிய ஊழியர்கள் மூன்று முதல் ஆறு மாதகாலமும் இப்போது பணியில் உள்ள ஊழியர்கள் மூன்று மாதங்கள் வரையிலும் பணியிடப் பயிற்சியில் அமர்த்தப்பட வேண்டும்.
இதனிடையே, ஆலோசனை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் சில்லறை விற்பனையாளர்கள் அதிகமான பயிற்சித் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.
அதன் தொடர்பில், பாவ்ஸுன் ஏஷியா, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் சில்லறை விற்பனை ஆய்வு நிலையம், டெரா சிஸ்டம்ஸ், விஇ கேப்பிட்டல் ஏஷியா ஆகிய திறன் மேம்பாட்டுப் பங்காளிகளுடன் சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

