செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3f06228b-f641-4734-a234-4d8303d0d5de
-
Google News Preferred Icon

ஓட்டுநர் உரிம எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவருக்குச் சிறை

இவ்வாண்டு ஜூன் 16ஆம் தேதி, ஓட்டுநர் உரிமத்திற்குத் தகுதிபெறுவதற்கான இறுதி எழுத்துத் தேர்வில் தோல்வி அடைந்தார் 25 வயது சிங்கப்பூரரான ஸு ஜுன்யுவான். அதன்பின் அவர் தனது அடையாள அட்டையைச் சீனாவைச் சேர்ந்த லெங் ஷுவாங், 38, என்பவரிடம் கொடுத்து, ஜூன் 30ஆம் தேதி தன் சார்பாக மீண்டும் அத்தேர்வை எழுதும்படி கேட்டுக்கொண்டார். தேர்வில் தேறினால் லெங்குக்குப் பணம் தருவதாக ஸு கூறினார். ஆனால், லெங் தம்மிடம் கொடுத்த அடையாள அட்டையைச் சரிபார்த்த தேர்வு ஆய்வாளர் சந்தேகப்பட்டார். ஸுவின் பிறந்த தேதியைக் கூறுமாறு கேட்டபோது தவறான பதிலளித்ததால் லெங் மாட்டிக்கொண்டார். பின்னர் ஆள்மாறாட்டம் செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட ஸுவிற்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு $10,000 பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர் தமது தண்டனைக் காலத்தைத் தொடங்கும் வகையில் டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸுவிற்காக ஆள்மாறாட்டம் செய்த லெங்கிற்கு ஏற்கெனவே இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.

$20,000 லஞ்சம் வாங்கியவருக்குச் சிறை

ஷெல் நிறுவனத்தின் புலாவ் புக்கோம் பெட்ரோகெமிக்கல் உற்பத்தி மையத்தில் கப்பலில் நிரப்பப்பட்ட எரிபொருளின் அளவைத் துல்லியமாகக் குறிப்பிடாததற்காக US$15,000 (S$20,514) லஞ்சம் பெற்ற ஆடவருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 'இன்டர்டெக் டெஸ்டிங் சர்விசஸ்' நிறுவனத்தில் பணியாற்றிய ஜஸ்பீர் சிங் பரம்ஜித் சிங், 38, லஞ்சமாகப் பெற்ற அத்தொகையைத் தண்டமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அத்தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்படுவார். 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மூன்று முறை லஞ்சம் பெற்றார் சிங். ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக இவ்வாண்டு ஏப்ரலில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் சிங்கும் ஒருவர்.

சிறுமியிடம் அத்துமீறியதைச் சமூக ஊடகம் வழியாக ஒப்புக்கொண்டார்

குடிபோதையில் இருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதைச் சமூக ஊடகம் வழியாக ஒப்புக்கொண்ட 19 வயது இளையர், தன்மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார். சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆடவரின் பெயரை வெளியிட முடியாது. குற்றம் புரிந்த இளையர், மது கலந்த பானத்தை அந்தச் சிறுமிக்குக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்தபின் அவருடன் பாலியல் உறவுகொண்டார். இச்சம்பவம் 2021 செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்தது. இதைப் பற்றி அவ்விளையரும் அவரின் நண்பர்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, பொதுமக்கள் அவர்மீது காவல்துறையில் புகாரளித்தனர். அதனையடுத்து, 2021 நவம்பர் 23ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.