1981ஆம் ஆண்டு ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்தவருக்கு 18 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரால் அதிகம் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான சின் ஷியோங் ஹான், 72 (படம்), கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
சிறைக் கைதிகளுக்குப் பொதுவாக வழங்கப்படும் மூன்றில் ஒரு பங்கு தண்டனைக் குறைப்பையும் இவரது சிறைக்காலத்தைப் பின்னோக்கி கணக்கிடப்பட்டதையும் கருத்தில் கொள்ளும்போது, சின் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இதற்குமுன் தாய்லாந்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சின், 2013ல் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டார். உள்ளூர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
2013 ஜூன் 6ஆம் தேதி சின் கைது செய்யப்பட்டார். 1981 ஜூலைக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தி மூன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்குத் தகுதியற்றவர் என தீர்மானிக்கப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1981 ஜூலையில் லோரோங் 1 கேலாங்கில் உள்ள முன்னாள் சிங்கப்பூர் பேருந்து முனையத்தில் திரு ஈ சோங் லியோங் என்பவரிடம் இருந்து ஏறக்குறைய $16,000 கொள்ளையடித்ததை சின் ஒப்புக்கொண்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தஞ்சோங் காத்தோங் சாலையில் உள்ள ஓவர்சீஸ் யூனியன் வங்கியின் முன் திரு சுவா பூன் லியோங்கை துப்பாக்கியால் மிரட்டி ஏறத்தாழ $1,800 கொள்ளையடித்தார் சின்.
அதே ஆண்டு நவம்பரில், தாம்சனில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியின் முன்னால் திருமதி கோ சியூ ஃபூன் என்பவரை மிரட்டி அவரிடமிருந்து $92,000ஐ கொள்ளையடித்தபோது அவரைத் துப்பாக்கியால் சுட்டார் சின். இதனால், திருவாட்டி கோவின் வயிற்றிலும் நுரையீரலிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அவர் உயிர்பிழைத்தார்.
சின் நிலையற்ற பண்பு உடையவர் என்பதை மனநலக் கழகம் மதிப்பிட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இதேபோன்ற குற்றங்களை அவர் செய்யக்கூடும் என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனையை விதிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் நேற்று கேட்டுக்கொண்டார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவரது மனநலப் பிரச்சினைக்குத் தகுந்த மருத்துவ உதவி கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்று அவர் வாதிட்டார்.
சின்னின் வழக்கறிஞர் மெர்வின் சியோங், சின்னுக்கு 13 ஆண்டுகளும் ஏழு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கக்கோரி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் மூப்படைந்துவிட்டதாலும் உடல்நிலை குன்றியுள்ளதாலும் சின் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் குறைவாக உள்ளது என்று திரு சியோங் வாதிட்டார்.
1981ல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரன்

