சமிக்ஞைக் கோளாறு காரணமாக வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் பூன் கெங் - பொத்தோங் பாசிர் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை ரயில் சேவை தடைபட்டது.
இதனையடுத்து, பயண நேரம் பத்து நிமிடங்கள் அதிகமாகும் என்று மாலை 6.37 மணிக்கு எஸ்பிஎஸ் நிறுவனம் டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது.
அதன்பின் 6.53 மணிக்கு வெளியிட்ட பதிவில், பயணிகள் கூடுதலாக 20 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம் என்று அந்நிறுவனம் கூறியது.
சேவைத் தடையைத் தொடர்ந்து, ஹார்பர்ஃபிரண்ட் - ஃபேரர் பார்க் நிலையங்களுக்கு இடையே குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் இலவசப் பேருந்து சேவை வழங்கப்பட்டது.
மாலை நேரத்தில் சேவைத் தாமதம் ஏற்பட்டதால் ரயில் நிலைய நடைமேடையில் நகர இடமின்றி கூட்டம் நிரம்பி வழிந்ததாக 'டாடா எஸ்எம்ஆர்டி' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
பின்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஹார்பர்ஃபிரண்ட், ஊட்ரம் பார்க், சைனாடவுன், டோபி காட், லிட்டில் இந்தியா, சிராங்கூன் ஆகிய நிலையங்களில் மற்ற ரயில் பாதைகளை நாடுமாறு எஸ்பிஎஸ் கேட்டுக்கொண்டது.

