மனைவி, குழந்தைகள் இல்லாத நேரங்களில் பணிப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த ஆடவர்

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரங்களில் பணிப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த ஆடவர்

1 mins read
66341b13-52a9-4c85-9ffd-7da1a26b70ef
-
Google News Preferred Icon

தன் மனைவியும் மூன்று குழந்தைகளும் வீட்டில் இல்லாத நேரங்களில் இல்லப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்த ஆடவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேலையில்லாத அந்த 34 வயது ஆடவர், கடந்த 2020 செப்டம்பர், அக்டோபர் என இரு மாதங்களில் பலமுறை அந்த இந்தோனீசியப் பணிப்பெண்ணைச் சீரழித்தார்.

அப்போது 24 வயதான அந்தப் பெண் தொடக்கத்தில் அத்துன்புறுத்தலைத் தாங்கிக்கொண்டாலும் பின்னர் கொடுமை தாளாது அவ்வீட்டைவிட்டு வெளியேறினார்.

தம்மை வேலையில் அமர்த்திய முகவரிடம் தொலைபேசி வழியாக தமக்கு நேர்ந்த இன்னலை விவரித்தார்.

அதைக் கேட்ட அந்த முகவர், காவல்துறையிடம் புகார் அளிப்பதால் சிங்கப்பூரில் அவர் வேலை செய்வதற்கு பாதிப்பிருக்காது என்று அப்பெண்ணிடம் கூறினார்.

இருப்பினும், ஏற்கெனவே பட்ட துன்புறுத்ததால் அவர் ஆண்கள்மீது அவநம்பிக்கை கொண்டார். அதனால் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் போகவே, அடுத்து வேலை செய்த இரண்டு வீடுகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

போதாக்குறைக்கு, நடந்ததற்கெல்லாம் அப்பெண்ணே காரணம் என்று அவரின் காதலரும் குடும்பத்தினரும் குறைகூறினர்.

ஒருவழியாக, இவ்வாண்டு மே மாதத்தில் அவருக்குத் துப்புரவாளர் வேலை கிடைத்தது.

தன்மீதான பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நேற்று அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அவர்மீதான பாலியல் சார்ந்த வேறு ஒன்பது குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.