ஜி20: மின்னிலக்க பொருளியல் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் லீ
மின்னிலக்கமயமாதலில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்க, நாடுகள் அவற்றுக்கு இடையிலான விதிமுறைகள், தரநிலைகள், தரவுக் கட்டமைப்புகள், கொள்கைகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தகத்தை எளிதில் மேற்கொள்ள இது உதவும் என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா, தென்கொரியா, பிரிட்டன் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் உடன்படிக்கைகளைச் செய்துகொண்டிருப்பதைத் திரு லீ குறிப்பிட்டார். காலப்போக்கில் இத்தகைய நடவடிக்கையை விரிவுபடுத்தவும் திட்டமிருப்பதாக அவர் கூறினார்.
ஆசியானின் தலைமைத்துவப் பொறுப்பை அடுத்த ஆண்டு ஏற்கவிருக்கும் இந்தோனீசியாவுடன் இணைந்து இந்த வட்டாரத்தில் மின்னிலக்க ஒருங்கிணைப்பையும் தொடர்பையும் வலுப்படுத்துவற்கான முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது. ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பில் இருதரப்பும் இணைந்து பணியாற்றுவதாகத் திரு லீ கூறினார்.
மின்னிலக்க உருமாற்றம் தொடர்பான கூட்டத்தில் அவர் பேசினார். கொவிட்-19 கிருமிப் பரவல் பல நாடுகளில் மின்னிலக்கமயமாதலை விரைவுபடுத்தியிருக்கிறது என்று கூறிய திரு லீ, வருங்கால வளர்ச்சிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை மேம்பாட்டு இலக்குகளை எட்டுவதற்கும் அதுதான் உந்துசக்தி என்றார்.
மின்னிலக்கச் சொத்துகள் தொடர்பில் உறுதியான அனைத்துலக விதிமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றார் பிரதமர் லீ.
சிங்கப்பூர் ஜி20 அமைப்பில் இடம்பெறாவிட்டாலும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் அழைப்பை ஏற்று பிரதமர் லீ பாலித் தீவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டார்.

