சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, 90 மீட்டர் உயரத்திற்கு நீளக்கூடிய தீ, உயிர் மீட்பு வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
காலாங், பொங்கோல் தீயணைப்பு நிலையங்களில் அடுத்த ஆண்டு முதல் இத்தகைய இரண்டு வாகனங்கள் சேவையில் இணையும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பணித்திட்டக் கருத்தரங்கில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
வாகனத்தில் தீயணைப்பாளர்கள் நிற்கக்கூடிய தளம் 500 கிலோ எடை வரை தாங்கும். நிமிடத்திற்கு 3,800 லிட்டர் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வசதி இதில் உள்ளது.
குடிமைத் தற்காப்புப் படையின் தற்போதைய வான்வழி தீயணைப்பு, மீட்புப் பணிகளை 34 மீட்டர் முதல் 60 மீட்டர் உயரம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
புதிய வாகனத்தை உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கி உள்ளது.
குடிமைத் தற்காப்புப் படை அதன் செயல்பாட்டுத் தயார் நிலையையும் உயரமான இடங்களில் தீ விபத்துகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக்கொள்ள இந்த வாகனம் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.

