நீர்ச் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக, மேற்கு நீர்ப்பிடிப்புக் காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணி 2023ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காட்டுப்பகுதியை அழிப்பதால் காட்டுயிர்களின்மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
பழைமையான சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை மூலமாக சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பில் ஆராய்ந்த கழகம், அது செலவுமிக்க பெரும்பணி என்று குறிப்பிட்டது.
காட்டுப்பகுதி அழிப்புத் தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நான்கு வாரகாலம் அக்கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில், சிங்கப்பூரின் நீர்ப் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியம் என்றாலும், காட்டுப்பகுதி அழிக்கப்படக்கூடாது என்றும் பல்லுயிர்ப்பெருக்கம் காக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்துரைத்தனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (என்டியு) ஒட்டி உள்ள அந்த 3.2 ஹெக்டர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியை அழிப்பது, தாவர, காட்டுயிர் வளத்தில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடந்த ஜூலையில் வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.
ஆயினும், அந்த நீராலையை இடமாற்றுவதால் ஜூரோங் ஈஸ்ட், ஜூரோங் வெஸ்ட், துவாஸ், என்டியு உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்று கழகம் தெரிவித்தது. மறுகட்டுமானத்திற்காக ஆலையை ஒட்டிய பகுதியைக் கையகப்படுத்துவதே இடையூறு குறைவான, பொருளியல் ரீதியில் சாத்தியமிக்க நடவடிக்கை என்று அவ்வமைப்பு இம்மாதம் 10ஆம் தேதி தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அழிக்கப்படவுள்ள காட்டுப்பகுதி, ஆறு காற்பந்துத் திடல்களின் அளவுகொண்டது. அருகிவரும் சுண்டா எறும்புண்ணி, வைக்கோல் தலை புல்புல் பறவை போன்றவற்றின் வாழிடமாக அந்தப் பகுதி விளங்குகிறது.
அத்துடன், அருகிவரும் உயிரினங்களின் வாழிடமாகக் கருதப்படும் இரு நன்னீர் ஓடைகளும் கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காணப்படாத, அருகிவரும் 'ஜான்சன் நன்னீர் நண்டுகள்' அந்த நீரோடைகளில் வாழ்கின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் அளித்த ஆலோசனைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதாகக் கழகம் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, ஜான்சன் நண்டுகள் வாழும் நன்னீரோடையை 24 மாதங்களுக்குக் கண்காணிப்பதும் அவற்றில் ஒன்று. அத்துடன், காட்டுயிர்களை எதிர்கொள்வது குறித்தும் ஊழியர்களுக்குக் கழகம் பயிற்சியளிக்கும்.

