'ஹைஃபிளக்ஸ்' நிறுவன முன்னாள் உயரதிகாரிகள்மீது நடவடிக்கை
'ஹைஃபிளக்ஸ்' நிறுவனத்தைத் தோற்றுவித்தவரும் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒலிவியா லம் உய் லின் (படம்), அதன் முன்னாள் தலைமை நிதி அதிகாரி சோ வீ பெங், முன்னாள் இயக்குநர்கள் நால்வர் ஆகியோர்மீது பங்குச் சந்தை மோசடி தொடர்பிலான 'செக்யூரிட்டிஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ்' சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான 'ஹைஃபிளக்ஸ்' மூடப்பட்டு 17 மாதங்கள் ஆன நிலையில் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனம் மூடப்பட்டதால் ஏறக்குறைய 34,000 முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 900 மில்லியன் வெள்ளி நட்டம் ஏற்பட்டது.
'துவாஸ் ஸ்பிரிங்' ஒருங்கிணைந்த தண்ணீர், எரிசக்தித் திட்டம் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியிட மறுத்ததன் தொடர்பில் இந்த உயரதிகாரிகள் ஆறு பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
61 வயதாகும் திருவாட்டி லம், 100,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் பங்குச் சந்தை விதிமுறைகளின்கீழ் 'துவாஸ் ஸ்பிரிங்' சுத்திகரிப்பு ஆலை 'ஹைஃபிளக்ஸ்' நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்பதையும் அது மின்சாரத்தை விற்பதன் மூலம் ஈட்டும் வருவாய் மூலமே லாபம் ஈட்ட முடியும் என்பதையும் வேண்டுமென்றே வெளியிடாமல் மறைத்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ 250,000 வெள்ளி வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
'ஹைஃபிளக்ஸ்' நிறுவனத்தின் கடன் உடன்படிக்கை குறித்து ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தகவல் தெரிவிக்காததால், நிறுவனச் சட்டத்தின்கீழும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சோ வீ பெங் 160,000 வெள்ளிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வர் 66 வயது டியோ கியாங் கோக், 63 வயது கிறிஸ்டோஃபர் முருகேசு, 66 வயது கே சீ சியோங், 65 வயது ராஜசேகர் குப்புசாமி மிட்டா ஆகியோர். இந்நால்வர் மீதும் ஆளுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டியோவும் கேயும் தனித்தனியே 160,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிட்டா 240,000 வெள்ளி பிணையிலும் முருகேசு 80,000 வெள்ளி பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

