செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
41bd4834-a6f2-4385-872a-eac87549ec5d
-
Google News Preferred Icon

பீச் ரோடு கொலை: மலேசியாவில் பிடிபட்ட சந்தேகப் பேர்வழி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பீச் ரோடு கடை ஒன்றில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார் 27 வயது ரேச்சல் ஆங் சி யிங்.

புதுப்பிப்பு நிறுவனத்தை நடத்திவந்த அவர் இம்மாதம் 9ஆம் தேதி காணாமற்போனார். திருவாட்டி ஆங்கைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவர் மலேசியாவிற்குத் தப்பிச்சென்றதாகத் தெரியவந்தது.

சிங்கப்பூர் காவல்துறை, அரச மலேசியக் காவற்படையிடம் உதவிகோரியதைத் தொடர்ந்து, அந்த ஆடவர் சென்ற செவ்வாய்க்கிழமை மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் சிங்கப்பூர் கொண்டுவரப்பட்ட அவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் தவறிழைத்தவர்கள் எங்கு தப்பிச் சென்றாலும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர் என்று காவல்துறை கூறியது.

$3.7 மில்லியன் மோசடி செய்த சிங்கப்பூரர் மலேசியாவில் கைது

சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில், 3.7 மில்லியன் வெள்ளி மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவர் ஜோகூரில் கைது செய்யப்பட்டார். ஆடவர் நேற்று சிங்கப்பூர்க் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஏறத்தாழ 50 பேரை ஏமாற்றிய அவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

சிங்கப்பூர் வர்த்தக விவகாரத் துறையும் அரசிய மலேசியக் காவல்படையின் ஜோகூர் வர்த்தகக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இம்மாதம் 7ஆம் தேதி ஜோகூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையில் ஆடவர் பிடிபட்டார். அவருக்குப் பல்வேறு பண மோசடி நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலீடுகள், வேலை வாய்ப்பு ஆகியவை தொடர்பான மோசடிகளும் அரசாங்க அதிகாரிகளைப்போல வேடமிட்டு ஏமாற்றிய நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும். டெலிகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளை வெளியிட்டு அந்த ஆடவர் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.