திருத்த உத்தரவின்கீழ் கூடுதல் இடங்களில் குப்பை அகற்றம்

திருத்த உத்தரவின்கீழ் கூடுதல் இடங்களில் குப்பை அகற்றம்

1 mins read
e0537130-4575-43f9-89d5-5984591ff6ec
திருத்த வேலை உத்தரவின்கீழ் நகர்ப்புறத்தில் குப்பை அகற்றும் நடவடிக்கை சைனாடவுன், தஞ்சோங் பகார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

பொது இடங்களில் குப்பை போடுவோர் இனி இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த மேலங்கி அணிந்து சிங்கப்பூரின் நகர்ப்புற வீதிகளைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

திருத்த வேலை உத்தரவின்கீழ் குப்பை அகற்றும் பணியை அதிகாரிகள் கூடுதலான இடங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதே இதற்குக் காரணம்.

சைனாடவுன் பகுதியில் சென்ற செவ்வாய்க்கிழமையும் தஞ்சோங் பகாரில் வியாழக்கிழமையும் இத்தகைய திருத்த வேலை உத்தரவின்கீழான குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

குப்பை போடுவதன் பின்விளைவுகளைத் தெளிவாக உணரவைப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

திருத்த வேலை உத்தரவின்கீழ், விதிமுறைகளை மீறி குப்பை போடுவோர் மூன்று முதல் 12 மணி நேரத்துக்குப் பொது இடங்களைச் சுத்தம் செய்யவேண்டும்.

குப்பை போடுதலின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் துப்புரவுப் பணியாளர்களின் சிரமத்தைப் புரிந்துகொள்ள வகைசெய்வதும் இதன் நோக்கம்.

கடந்த 2017 முதல் சென்ற ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக 27,200 பேருக்கு குப்பை போட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10,200 பேருக்கு திருத்த வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீசப்படும் குப்பைகளில் அதிகமானவை சிகரெட் துண்டுகள். குப்பை போடுவோரில் பெரும்பாலோர் 18 முதல் 35 வயது வரையிலான ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது.

முதல்முறை குப்பை போட்டால் $300 அபராதம் விதிக்கப்படும். மறுமுறை போடுவோருக்கும் உயர்மாடிகளில் இருந்து குப்பை போடுவோருக்கும் நீதிமன்றத்தில் அபராதத்துடன் திருத்த வேலை உத்தரவும் பிறப்பிக்கப்படும்.