சிங்கப்பூரும் பங்ளாதேஷும் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் வர்த்தக, முதலீட்டை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான எஸ். ஈஸ்வரனும் பங்ளாதேஷ் வர்த்தக அமைச்சரான திபு முன்ஷியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திரு ஈஸ்வரன், இம்மாதம் 15 முதல் 17ஆம் தேதி வரை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புதிய ஒப்பந்தத்தின்கீழ் இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இந்தக்குழு, புதுப்பிக்கப்படும் எரிபொருள், தளவாடம், வர்த்தகம் போன்ற துறைகளில் உள்ள வாய்பு களைக் கண்டறிந்து வர்த்தக, முதலீட்டை பெருக்க உதவும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம், பொருளியல் ஒத்துழைப்புக்கான முக்கிய மைல்கல் என்று திரு ஈஸ்வரன் வர்ணித்தார். 2030ஆம் ஆண்டில் உலகின் 30 பெரிய பொருளியல் நாடுகளில் ஒன்றாக பங்ளாதேஷ் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பங்களாதேஷின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த முடியும் என்றார் அவர்.
2011க்கும் 2021க்கும் இடையே ஆறு முதல் ஏழு விழுக்காடு பொருளியல் வளர்ச்சியுடன் பங்களாதேஷ் அதிவேகத்தில் வளர்ச்சியடையும் நாடாக இருக்கிறது.
"இருதரப்பு பொருளியல் உறவை வலுப்படுத்தவும் பரஸ்பர நலன்களுக்கும் பங்ளாதேஷுடன் சேர்ந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறோம்," என்று கூறிய அமைச்சர் ஈஸ்வரன், ஏற்கெனவே பல சிங்கப்பூர் நிறுவனங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அங்கு தளம் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
திரு ஈஸ்வரன் தனது பயணத்தின்போது பங்ளாதேஷ் பிரதமரின் தனியார் துறை, முதலீட்டு ஆலோசகரான சல்மான் எஃப் ரஹ்மான், தகவல் தொடர்பு தொழில்நுட்ப துணை அமைச்சர் ஸுனைட் பலக், பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில் சிங்கப்பூர் பேராளர் குழு, தங்களுடைய வர்த்தகப் பயணத்தில் பல அரசாங்க அமைப்புகளின் அதிகாரிகளைச் சந்தித்தனர். இந்தப் பேராளர்கள் குழு, டாக்காவில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தது.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான எஸ். ஈஸ்வரனும் பங்ளாதேஷ் வர்த்தக அமைச்சர் திபு முன்ஷியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
படம்: எஸ்ஜிபிசி.கவ்.எஸ்ஜி

