சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு நேற்று நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 45 வயதான சங்கர் சுப்பையா தம் மீது சுமத்தப்பட்ட ஐந்து மோசடி குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
அவர் 'ஆல் ரிசோர்ஸ் நெட்வொர்க்' (ஏஆர்என்) நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார்.
குற்றங்கள் புரிந்த நேரத்தில், இந்த நிறுவனம் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் விநியோகிப்பாளராக இருந்தது. சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் துணை இயக்குநர் ரிக்ரம் ஜித் சிங், 42, வணிக மேம்பாட்டைக் கையாண்டார்.
அவரது மனைவி ஆஸ்யா கிரின் கேம்ஸ், 35, 2014ல் ஏஆர்என் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ரிக்ரம் தானும் ஆஸ்யாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இதனால் கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பட்டநிலைக்கு இது வழிவிடக்கூடும் என்றும் அவரின் பால்ய நண்பரான சங்கரிடம் கூறினார்.
இதையடுத்து, சங்கர் நிறு
வனத்தின் தனி உரிமையாளராகப் பொறுப்பேற்றார். இதனால், முரண்பாடுகள் இல்லாமல் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துக்கு தொடர்ந்து விநியோகிக்க, 2017ஆம் ஆண்டு சங்கர் ஏஆர்என் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணையின் போது குறிப்பிட்டார். ரிக்ரமின் நண்பராக, கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று நினைத்த சங்கர், தான் செய்த வேலைக்கு சம்பளம் வாங்கவில்லை.
ஆஸ்யாவும் ரிக்ரமும் ஏஆர்என் நிறுவனம் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்கும்படி சங்கரிடம் கேட்டுக்கொண்டனர். சங்கர் இந்தக் கணக்கின் ஒரே உரிமையாளராக இருந்தபோதும் ரிக்ரம் மற்றும் ஆஸ்யா அதன் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொண்டனர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் மூலம் ஏஆர்என் நிறுவனம் ஐந்து முறை பெற்ற தொகை $110,500.
2020 டிசம்பரில் ரிக்ரம், ஆஸ்யா இருவர் மீதும் தலா 45 மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்தக் குற்றத்தில் சங்கர் பண ரீதியாகப் பலனடையவில்லை என்றும் குற்றங்களைச் செய்ததற்காக அவர் வருந்துவதாகவும் மாவட்ட நீதிபதி கருத்தில் கொண்டார்.
மோசடிக் குற்றத்துக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

