சிங்கப்பூர் அக்கம்பக்கங்களில் அதிகச் சத்தமிடாமல் அமைதி காக்க வேண்டிய நேரம் நீட்டிக்கப்படலாம்.
தற்போது அக்கம்பக்கங்களில் இரவு பத்து மணி முதல் காலை 7.30 மணி வரை அக்கம்பக்கங்களில் அதிக சத்தம் போடக்கூடாது. அதை இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அக்கம்பக்க இரைச்சல் பற்றிய சமூக ஆலோசனைக் குழு முன்வைத்த பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.
மேலும் அக்கம்பக்க இரைச்சலைக் குறைக்கவும் அது தொடர்பான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்க அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.
சட்டத்தில் உள்ள வழிகளைப் பயன்படுத்தி, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக அந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்று ஆலோசனைக் குழு கூறியது.
சத்தமாக இசையை ஒலிக்க விடுவது, வீடுகளில் நடக்கும் ஒன்றுகூடல்களிலும் வெற்றுக் கீழ்த்தளங்கள் போன்ற பொது இடங்களிலும் சத்தமாகப் பேசுவது, அறைக்கலன்களை தரதரவென்று இழுப்பது போன்றவை அக்கம்பக்க இரைச்சலுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அக்கம்பக்க இரைச்சல் பிரச்சனையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க அதன் தொடர்பான சமூக ஆலோசனைக் குழு ஏப்ரலில் அமைக்கப்பட்டது.
"இரைச்சல் நம் வாழ்வில் அன்றாடப் பகுதி என்றாலும், சில நேரங்களில் நீண்டகாலம் எதிர்கொண்டால் அதுவே குடியிருப்பாளர்களின் மனநலனையும் உடல்நலனையும் பாதிக்கும் கடும் பிரச்சனையாக உருவெடுக்கலாம்," என்று ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் வில்லியம் வான் கூறினாார்.

