முரசொலி
ஒரு நாட்டில் நன்னெறிகள் மிளிர்வதற்கு அந்த நாட்டின் சமூகம் முக்கிய காரணம். சமூகத்திற்கு அடிப்படை குடும்பம். அந்தக் குடும்பம் அன்பை தூணாகக் கொண்டுதான் கட்டமைக்கப்படுகிறது.
தாத்தா, பாட்டி, தந்தை, தாய், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஆலமரம் போல் பாசத்தால் பிணைக்கப்பட்டு இருக்கும் குடும்பங்கள்தான் ஒரு சமுதாயத்தின், நாட்டின் அடிப்படையாகத் திகழ்கின்றன.
என்றாலும்கூட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக சில குடும்பங்களில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் பாசப் பிணைப்பு அறுந்து போகும் அளவிற்கு நிலவரங்கள் தலைதூக்குவது பொதுவான ஒரு சூழலாக இருக்கிறது.
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து, பிள்ளைகளுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, பிள்ளைகளின் நல்வாழ்விற்கே பாடுபட்டு கடைசியில் அவர்களையே நம்பி, ஆதரவு கிடைக் காமல் வாழாமல் வாடும் பெற்றோர் இருக்கிறார்கள்.
அதேவேளையில், செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல், பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திவிட்டு கடைசியில் அவர்களின் உதவி தேவை என்று போராடும் பெற்றோரும் உண்டு.
இப்படி கடமை தவறிய பெற்றோர், பாசமில்லா பிள்ளைகளுக்கு இடையில் நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது முயற்சிகள் தேவைப்படுகின்றன.
அத்தகைய இரு தரப்பினரின் உரிமைகளையும் நிலைநாட்ட சில நேரங்களில் சட்ட அமைப்பும் தேவைப்படுகிறது. அத்தகைய சட்டம் குடும்ப உறவைச் சீர்கெடுத்துவிடாமல் அன்பு, பாசத்தைப் பலப்படுத்தும் வகையில் அவரவருக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டியது கட்டாயமானது.
இதை உத்தேசித்து, இந்த நோக்கத்துடன், சிங்கப்பூரில் 1995ல் பெற்றோர் பராமரிப்புச் சட்டம் என்ற சட்டம் நடப்புக்கு வந்தது.
அந்தச் சட்டம், 60 வயதும் அதற்கும் அதிக வயதும் உள்ள சிங்கப்பூர்வாசிகள், தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியவில்லை எனில், தங்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளக்கூடிய வசதியுடன் பிள்ளைகள் இருந்தபோதும் அவர்கள் தங்களைக் கைவிட்டுவிட்டார்கள் எனில், பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பு பெறுவதற்கு உதவுகிறது.
நீதிமன்றத்தை நாடுவதை தவிர்த்து சமரசமான வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அந்தச் சட்டம் முன்னுரிமை அளிக்கிறது.
மோதல் போக்கு இல்லாமல் இணக்கப் போக்கு இருந்தால்தான் குடும்பத்தில் பந்தபாசம் வலுவடையும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குடும்ப உறவையும் பெற்றோர்-பிள்ளைகள் பாசத்தையும் மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் அந்தச் சட்டத்தில் இப்போது திருத்தங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெற்றோர்களைப் பாதுகாப்பது, அதே நேரத்தில், சட்டத்தைச் சாக்காக வைத்து பிள்ளைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து பிள்ளைகளையும் பாதுகாப்பது.
இதுதான் அந்த மாற்றங்களின் மூலாதார நோக்கமாக இருக்கிறது. அந்த உத்தேச மாற்றங்கள் சட்டத்தின் நோக்கத்தைக் கட்டிக்காப்பதற்கு உதவுவதோடு குடும்பப் பிரச்சினை என்று வரும்போது அதில் எல்லா தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் பயன்படுகிறது என்பதையும் திட்டவட்டமாக்குகின்றன.
பிள்ளைகளைக் கொடுமைபடுத்தி இருக்கின்ற, அலட்சியப்படுத்தி இருக்கின்ற, கைவிட்டு இருக்கின்ற பெற்றோர் முதலில் பெற்றோர் பராமரிப்பு நடுவர் மன்றத்தை அணுகி அனுமதி பெறவேண்டும்.
அந்த அனுமதியைப் பெற்ற பிறகுதான் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு இரு தரப்புக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.
அந்த சமரச முயற்சி தோல்வி அடைந்தால், பெற்றோர் அந்த நடுவர் மன்றத்தை அணுகி தங்களுடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் நிலையையும் முன்வைக்கலாம்.
அத்தகைய பெற்றோருக்கு எந்த அளவுக்கு பராமரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பிறகு நடுவர் மன்றம் அப்போது தீர்மானிக்கும்.
சட்டத்தில் இடம்பெறக்கூடிய திருத்தங்கள், பிள்ளைகளுக்குப் பெற்றோர் செய்திருக்கும் கொடுமைகளைக் கருத்தில்கொள்ளும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தி இருக்கும் பெற்றோர், பிற்காலத்தில் அதே பிள்ளைகளிடம் இருந்து தனக்கு ஆதரவு வேண்டும் என்று கேட்கும்போது அத்தகைய கோரிக்கை ஏன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஏற்படவே செய்யும். அத்தகைய எண்ணம், பிள்ளைகளைப் பொறுத்தவரை நியாயமானதாகவே இருக்கக்கூடும்.
ஆகையால், அத்தகைய சூழ்நிலையில், தங்களுடைய கோரிக்கை மனுக்கள் ஏன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை பெற்றோர் மெய்ப்பிக்க வேண்டியது புதிய சட்டத் திருத்தங்களின்படி அவசியமானதாக இருக்கும். பெற்றோரிடம் இருந்து பெறும் சில விண்ணப்பங்களை நடுவர் மன்றம் தானாகவே நிராகரித்துவிடும் அதிகாரத்தையும் புதிய திருத்தங்கள் வழங்குகின்றன.
இத்தகைய மனுக்களைப் பொறுத்தவரை, பிள்ளை கள் தங்களுடைய நிலைமையை எடுத்துக் கூறி பெற்றோரைத் தாங்கள் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை விளக்க வேண்டிய தேவை இராது.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, சூதாட்டம், குடி போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அடிமையாகிவிட்ட பெற்றோர், ஆலோசனைக்குச் செல்ல வேண்டும் என்றுகூட நடுவர் மன்றம் இனிமேல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும். இதற்கும் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
இத்தகைய ஆலோசனைகளில் பெற்றோர் கலந்துகொண்ட பிறகு அவர்களுடன் அவர்களுடைய பிள்ளைகள் கட்டாயமாக சமரச முயற்சிகளில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை அதிகாரிகள் முடிவு செய்யவும் புதிய திருத்தங்கள் வழிவகுக்கின்றன.
உத்தேச சட்டத்திருத்தங்கள் பற்றி பொதுமக்கள் கருத்துகளைப் பெறுவதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை கருத்தறியும் கூட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன.
மொத்தமாக எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கை யில் புதிய சட்டத்திருத்தங்கள் பாசப்பிணைப்பை உறுதிப்படுத்தி, குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்தி அதேவேளையில், பெற்றோருக்கும் பிள்கைளுக்கும் குடும்பத்தாருக்கும் இடையில் எல்லா தரப்புகளுக்கும் உள்ள உரிமைகளை நியாயமாக உறுதிப்படுத்தும் என நம்புவதற்குத் தாராளமாக இடம் உண்டு.

