மிகவும் சவாலான சூழலில் உலக வர்த்தகத்திற்கான ஒளிவு மறைவு இல்லாத விதிகளை நோக்கி ஒன்றாகச் சேர்ந்து நாடுகள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள் அல்லது இப்போதைய விதிமுறைகளை மேம்படுத்துவதற்கான தேவை இருக்கிறது. அதேவேளையில், நாடுகள் இப்போதைய விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேங்காக்கில் ஏபெக் எனப்படும் ஆசியப் பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் 29வது பொருளியல் தலைவர்கள் மாநாடு முடிந்த தறுவாயில் சிங்கப்பூர் ஊடகத்திற்கு திரு லீ பேட்டியளித்தார்.
"இத்தகைய வர்த்தக அம்சங்களைப் பற்றி விவாதிக்கக்கூடிய அமைப்புகளில் ஒன்றாக ஏபெக் இருக்கிறது.
"பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதேவேளையில், ஒருவர் மற்றொருவருடன் தொடர்ந்து பேசக்கூடிய ஒரு நிலையையும் ஏபெக் சாத்தியமாக்குகிறது," என்று அவர் தெரிவித்தார்.
பொருளியல் ஒருங்கிணைப்பையும் வளர்ச்சியையும் புவிசார் அரசியல் பதற்றங்கள் எந்த அளவுக்கு பாதித்து இருக்கின்றன என்பது பற்றி கேட்டபோது, ஆசிய பசிபிக் வட்டாரம் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் முழுமையான தாராள வர்த்தக மண்டலம் உருவாவதற்கு மிக அதிகக் காலம் பிடிக்கும் என்றார் பிரதமர் லீ.
இருந்தாலும், தாராள வர்த்தக இலக்கை நோக்கி ஒருவர் மற்றொருவருடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கூறினார். "வர்த்தகத்தை முக்கிய அம்சமாகக் கருதி நாடுகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வரவேண்டியது முக்கியமானது.
"நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதற்குத் தேவைப்படக்கூடிய விதிமுறைகள் பற்றியும் அவை பேச வேண்டும்," என்று திரு லீ கூறினார்.
வர்த்தகத்தையும் முதலீட்டையும் தாராளமயப்படுத்துவது என்பது ஏபெக் அமைப்பின் மூலாதார நோக்கம் என்பதை சுட்டிய திரு லீ, நாடுகள் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர்-சீனா ஒத்துழைப்பு பற்றி கருத்து கூறிய திரு லீ, இந்த இரு நாடுகளும் நல்ல உறவைப் பலப்படுத்தி வந்தால், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி வந்தால், இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்பு மிகவும் அகலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

