ஜூரோங் ஸ்பிரிங் வட்டாரம், வட்டாரவாசிகளை ஒன்றுதிரட்டி மூப்படையும் பிரச்சினையையும் வருமான ஏற்றதாழ்வு பிரச்சினையையும் சமாளிக்க முயன்று வருகிறது. சமூகத்தில் முதியோரை ஈடுபடுத்துவதுடன் குறைந்த சம்பளக் குடும்பங்களுக்கு உணவு, மளிகைப் பொருள்களை நன்கொடையாக வழங்கும்படி வசதி உள்ளவர்களை அது திரட்டி வருகிறது.
அம்முயற்சிகளில் ஒன்றாக குறைந்த வருமான குடியிருப்பாளர்களுக்கு நேற்று அரிசி, எண்ணெய், மைலோ, காய்கறிகள் போன்றவை ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் வழங்கப்பட்டன. தொண்டூழியர்கள் உணவை வழங்கவும் முதிய குடியிருப்பாளர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் உதவினர்.
சுன் டின் ரோடு, பியூட்டி வொர்ல்டு அருகே உள்ள தனியார் வீடுகளில் உள்ள வட்டாரவாசிகள் அப்பொருள்களை நன்கொடையாக வழங்கியதாக ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் ஹுவாங் கூறினார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் ஜூரோங் ஸ்பிரிங் வட்டாரத்துக்கு மேற்கொண்ட அமைச்சர்நிலை வருகையின்போது வட்டாரத்தில் உள்ள உதவித் திட்டங்கள் பற்றி திரு ஹுவாங் விளக்கினார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இயோ சூ காங் வட்டாரத்துக்கு வருகை மேற்கொண்டதை அடுத்து, ஈராண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அமைச்சர்நிலை வருகைகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கின.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் அமைச்சர்நிலை வருகைகளை நடத்துவர் என்றும் முன்னேறுவோம் சிங்கப்பூர் கருத்துப் பகிர்தல் நடவடிக்கை பற்றி அவர்கள் அப்போது விளக்குவர் என்றும் திரு வோங் அப்போது கூறியிருந்தார்.
நேற்றைய அமைச்சர்நிலை வருகையின் ஒரு பகுதியாக, டாக்டர் மாலிக்கி ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52 புளோக் 505ல் உள்ள சந்தை, உணவங்காடி நிலையத்துக்குச் சென்றார். பின்னர் ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் முதியவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார்.
முதியவர்கள் வீட்டில் தனிமையில் இருக்காமல் அவர்களை வெளியே வந்து மற்றவர்களுடன் பழக ஊக்குவிக்கும் 'பிங்கோ' விளையாட்டு, குழு நடனம் போன்றவை அங்கு நடப்பில் உள்ளன.

