என்டியுசி ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் ஆகிய இரண்டு பேரங்காடி நிறுவனங்களைக் சேர்ந்த குறைந்தது 1,000 ஊழியர்கள் மறதி நோயுள்ள முதியவர்களுக்கு உதவும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு களுக்குச் சென்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பும் (ஏஐசி) 'டிமென்ஷியா சிங்கப்பூர்' எனப்படும் சிங்கப்பூர் மறதிநோய் சங்கமும் அதற்கான வகுப்புகளை இவ்வாண்டு ஜூலையிலிருந்து நடத்தி வருகின்றன.
மறதிநோயுள்ளவர் ஒருவர் பேரங்காடிக் கிளைக்கு வந்தால் அவர்களுக்கு உதவ வகுப்புகள் ஊழியர்களை ஆயத்தப்படுகின்றன. மறதி நோயுள்ளவரிடம் தென்படும் அறிகுறிகள், அவர்களிடம் என்ன பேசுவது போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், ஃபேர்பிரைஸ், ஷெங்சியோங் ஆகியவற்றின் 200க்கும் மேற்பட்ட கிளைகள் மறதிநோயுள்ளவர்களுக்கு உதவும் முனையங் களாக நியமிக்கப்பட்டுள்ளன. 'கோ-டு-போயிண்ட்ஸ்' என்று அவை அழைக்கப்படுகின்றன.
மறதிநோய் உள்ள ஒருவர் வழிதெரியாது காணப்பட்டால், அல்லது அவர்களுக்கு வீடு எங்குள்ளது என்பதை மறந்திருந்தால், அவர்களை ஒப்படைக்கும் பாதுகாப்பான இடங்களாக அந்த முனையங்கள் செயல்படும். ஏற்கெனவே, எம்ஆர்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் அத்தகைய முனையங்கள் செயல்படுகின்றன.
மறதிநோயுள்ளவர்கள் சமூகத்தில் வசிப்பதற்கு, பேரங்காடிகள், எம்ஆர்டி நிலையங்கள், கட்டடங்கள், வங்கிகள் போன்றவை உதவும் என்றார் ஏஐசியின் தலைமை நிர்வாகி டான் குவாங் சியெக்.

