ராஃபிள்ஸ் பிளேசில் அமைந்திருந்த அந்நாளின் ராபின்சன்ஸ் கடைத்தொகுதியில் பெரும் தீச்சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 1972ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ராபின்சன்ஸ் கடைத்தொகுதி கட்டடத்தில் தீ மூண்டது. ஒன்பது பேர் அதில் மாண்டனர். சிங்கப்பூர் வரலாற்றில் ஏற்பட்ட ஆக மோசமான தீச்சம்பவங்களில் அதுவும் ஒன்று.
நவம்பர் 21ஆம் தேதி காலை 9.30 மணிக்குக் கடை திறந்த சில நிமிடங்களில் தீச்சம்பவம் ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பரணில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தீ மூண்டது.
தீப்பிழம்புகள் 60 மீட்டர் உயரம் வரை சென்றதாகவும் அவற்றை ஜூரோங்கிலிருந்து பார்க்க முடிந்ததாகவும் கூறப்பட்டது.
சிலர் மின்தூக்கிகளில் சிக்கிக் கொண்டிருந்தனர். கட்டடத்தில் இருந்த மின்தூக்கிகளில் ஒன்றிலிருந்து சிலர் அன்று காப்பாற்றப்பட்டனர்.
தீச்சம்பவம் நடந்த ஈராண்டு களுக்குப் பின்னர் சிங்கப்பூரில் தீ தொடர்பான விதிமுறைகள் முதன்முறையாக வெளியிடப்பட்டன. தற்போது அந்த விதிமுறை தொகுப்பேட்டின் எட்டாவது பதிப்பு நடப்பில் உள்ளது. ஒன்பதாவது பதிப்பு அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
அந்தத் தீச்சம்பவத்தில் கிடைத்த பெரிய பாடங்களில் ஒன்று மின்தூக்கிப் பாதுகாப்பாகும். மாண்டவர்களில் எட்டு பேர், மின்தூக்கியில் சிக்கி இறந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மாற்றுவழியில் மின்சாரம் பெறும் ஆற்றல் இல்லாத மின்தூக்கிகள் அவை.
தற்போதைய விதிமுறைகளின்படி சிங்கப்பூர் கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அங்குள்ள மின்தூக்கிகள் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட மாடிக்குச் செல்லும் ஆற்றல் உள்ளனவாக இருக்க வேண்டும். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் மாற்றுவழியில் மின்சாரம் பெறக்கூடிய மின்தூக்கிகள் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன், எளிதில் தீ பற்ற முடியாத பொருள்களால் கட்டடம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தீ வெவ்வேறு இடங்களில் பரவுவதைத் தடுக்க, தனித்தனி இடங்களாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.
மேலும், ராபின்சன்ஸ் கடைத்தொகுதி தீயை அடுத்து, தீயணைப்புச் சாதனங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சகோதரரின் நினைவாக கடிகாரம்
தீச்சம்பவம் நடந்த காலையில் வானொலி கேட்டுக்கொண்டிருந்த திரு சிவலிங்கம் சுந்தரேசனுக்கு திடுக்கிடும் செய்தி கிடைத்தது.
ராபின்சன்ஸ் கடைத்தொகுதியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த அவர் அவ்விடத்துக்கு விரைந்தார்.
அப்போது 33 வயதாகியிருந்த தமது அண்ணன் திரு சிவசுந்தரம் சுந்தேரசன் கடைத்தொகுதியில் மின்தூக்கிப் பணியாளராக வேலை பார்த்துகொண்டிருந்தார்.
அண்ணனைத் தேடி சென்ற திரு சிவலிங்கம் சம்பவ இடத்தில் மாலை 5 மணி வரைக்கும் காத்திருந்தார். அண்ணன் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
"அடுத்த நாள் நிருபர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து என் சகோதரர் பற்றி கேள்வி கேட்டனர். அவர் தீயில் மடிந்தது அவர்கள் சொல்லிதான் எனக்கு தெரியவந்தது," என்று நினைவுகூர்ந்தார் திரு சிவலிங்கம், 79.
சில நாள்கள் கழித்து, திரு சிவசுந்தரத்தின் உடமைகளைப் பெற்றுகொள்ள திரு சிவலிங்கம் அப்போதுள்ள ஊட்ரம் ரோடு பொது மருத்துவமனைக்குச் சென்றார் (தற்போதுள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனை). தீயில் மடிந்த திரு சிவசுந்தரத்தின் இடுப்பு எலும்பு மட்டும்தான் மிஞ்சியது. சம்பவம் நடந்தபோது அவர் அணிந்திருந்த சேக்கோ கைக்கடிகாரம் கருகிய நிலையில் திரு சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணனின் நினைவாக இன்று அந்தக் கைக் கடிகாரம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
"அந்த கடிகாரத்தை என்னால் பல வேளைகளில் பார்க்கக்கூட முடியாது. அன்று என் அண்ணனும் மற்றவர்களும் பட்ட வேதனையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை," என்று திரு சிவலிங்கம் கூறினார்.
மாண்ட திரு சிவசுந்தரத்திற்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

