மோனலிசா
வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் மாதம் ஒரு முறை கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றி அவர்களும் அவர்களின் முதலாளிகளும் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார். அந்த விதிமுறை ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.
வெளிநாட்டு இல்லப் பணி யாளர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட பல சேவை மையத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்ட அவர் இதைத் தெரிவித்தார்.
ஸ்டில் ரோடு அருகே உள்ள முன்னாள் தெலுக் குராவ் உயர் நிலைப்பள்ளிக் கட்டடத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று திறக்கப்பட்டுள்ளது.
'ஃபாஸ்ட் ஹப்' (FAST Hub) என்றழைக்கப்படும் இந்த மையம் 'ஃபாஸ்ட்' எனும் வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கான சமூக உதவி, பயிற்சி சங்கத்தின் முயற்சி யால் உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சின் ஆதரவோடு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 24 மணி நேர உதவி தொலைபேசி, ஆலோசனை, சட்ட அறிவுரை, பூசல் தீர்வு ஆலோசனை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆதரவு சேவைகள் வழங்கப்படுகின்றன.
உடற்பயிற்சிக் கூடம், யோகா நிலையம், சமூக ஆதரவு நிலையம், வாழ்நாள் கற்றல் நிலையம், 360 பணிப்பெண்கள் வரை தங்கக்கூடிய தங்குவிடுதி போன்றவை புதிய வளாகத்தில் உள்ளன. அவற்றுடன் பொழுதுபோக்குக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூடத்தில் 'கராவோக்கே' பாடல் அறைகள், இசைக்கூடம், உடற்பயிற்சிகள், நடனப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கான நடன அறை, உயர்தர சாதனங்கள் நிறைந்த சமையல் பயிற்சி அறை ஆகியவை உள்ளன.
மேலும், வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் தங்களுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் போன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகளை கொண்டாட உதவும் நோக்கில் சமூக அறை அமைக்கப்பட்டுள்ளது. இச்சேவைகளை இல்லப் பணியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.
திறப்புவிழாவின் ஓர் அங்கமாக பணியில் சிறந்து விளங்கும் பணிப்பெண்களையும் அவர்களது முதலாளிகளையும் அங்கீகரிக்கும் நோக்கில் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் முதலாளி-பணிப்பெண் இணையான ஷாலினி தனக்கோடி, 36, - பிரியா முருகையன், 41, அடங்குவர்.
"எங்கள் இல்லப் பணியாளரின் உதவியால் மட்டுமே மூன்றரை வயது மகனையும் எட்டு மாத மகளையும் வைத்துக்கொண்டு என்னால் வேலையில் கவனம் செலுத்த முடிகிறது. அவ்வகையில் அனைத்து பணிப்பெண்களின் சேவைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டியவை," என்று அரசாங்க ஊழியரான ஷாலினி கூறினார்.
"பணிப்பெண்ணையும் சக மனிதராக நட்புடன் நடந்துகொண்டு அவரது தேவைகளை கவனிக்கும் முதலாளிகளும் இல்லப் பணியாளர்களுக்கு உதவும் இது போன்ற மையங்களும் மிகுந்த நம்பிக்கை தருகின்றன. குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறோம் என்ற உணர்வைத் தாண்டி எங்களாலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது," என்றார் இல்லப் பணியாளர் பிரியா.
நேற்றைய நிகழ்ச்சியில் ஃபாஸ்ட் தொண்டூழிய நிறுவனம் ஷெங் சியோங் குழுமத்துடன் இணைந்து 20 வெளிநாட்டு இல்லப் பணியாளர்களுக்கு மொத்தம் 50,000 வெள்ளி மதிப்புள்ள உபகாரச் சம்பளத்தை வழங்கியது.
முதியோர் பராமரிப்பு, பேறு காலப் பராமரிப்பு, குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சி வகுப்பு களுக்கு இல்லப் பணியாளர்கள் அத்தொகையைப் பயன்படுத்தலாம்.
சக இல்லப் பணியாளர்களின் தலைமைத்துவப் பண்புகளை அவர்கள் மேம்படுத்த உதவும் திட்டத்தையும் ஃபாஸ்ட் நடத்தி வருகிறது.
சென்ற ஆண்டு திட்டத்தில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் 20 பேருக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருவாட்டி கானுடன் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கும் கலந்துகொண்டார்.

