முன்னாள் மாணவர் ஒருவரை நேர்காணல்வழி சந்திக்க வேண்டும் என நாங்கள் யோசித்தபோது, முன்னாள் மாணவரான சரண்யா முசிலா, 18, என்பவர் எங்கள் நினை வுக்கு வந்தார். 2020ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவரை நாங்கள் பேட்டி காண முடிவுசெய்து கடைத்தொகுதி ஒன்றில் சந்தித்தோம்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு மாணவியாகப் படிக்கும் அவர், தமிழ் இலக்கியப் பாடம் படித்து வருவதாக எங்களுடன் பகிர்ந்துகொண்டார். ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் அவருக்குத் தமிழ் ஆசிரியராக இருந்த திருவாட்டி லெட்சுமிதான் தனக்கு முன்னுதாரணம் என்று குறிப்பிட்ட சரண்யா, அவரைப் போலவே தானும் ஒரு தமிழாசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் படித்து வருகிறார்.
தமிழ்மொழி மீதுள்ள பற்று சிறுவயதிலேயே ஏற்படவில்லை என்ற சரண்யா, அந்த ஆர்வம் உயர்
நிலைப் பள்ளியில்தான் வந்தது என்றார். தொடக்கப் பள்ளியில் தமிழை வெறும் பள்ளிப் பாடமாக மட்டுமே தான் கருதியதாகக் குறிப்பிட்டார். தமிழ்மொழி படிப்பதால் என்ன பயன் என்றுகூட அந்த காலகட்டத்தில் தான் எண்ணியதுண்டு என்றார் அவர். இருப்பினும், உயர்நிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ்மொழி என்பது பெருங்கடல் போன்றது என்றும் அதன் ஆழமும் அழகும் குறைவில்லாதது என்றும் சரண்யா புரிந்துகொண்டார்.
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் தனக்குப் பலவகை
யிலும் உதவியும் ஆதரவும் கிடைத்ததாக சரண்யா கூறினார். தன் திறமையை வெளிப்படுத்த பல வாய்ப்பு கள் தரப்பட்டதாகத் தெரிவித்தார்.
பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தன்முனைப்பு பேச்சுகள் அவரைச் சிந்திக்க வைத்ததுடன் எதிர்
காலத்தில் சிறந்த பேச்சாளராக உருவெடுக்கவும் ஊக்குவித்த
தாகச் சொன்னார்.
பலமுறை மனம் துவண்டு போனதைப் பற்றியும் சரண்யா எங்களுடன் பகிர்ந்துகொண்டார். 'என்னால் முடியுமா?' என்ற சந்தேகம் எழும்போது அதைத் தட்டிக்கழித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசிப்பதாக அவர் கூறினார்.
தற்போது தொடக்கக் கல்லூரியில் படிக்கும் சூழல் பரபரப்பானது என்று கூறிய சரண்யா, நிறைய பொறுப்புகளையும் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார். இதனால் அவ்வப்போது தன்னம்பிக்கையை இழப்பது போன்று தோன்றினாலும் விடாமுயற்சியைக் கைவிடாமல் தான் படித்துவரு
வதாக சரண்யா குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர் சில குறிப்பு
களையும் கூறியுள்ளார்.
தமிழ் இலக்கியம் கடினமானதல்ல. இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்குக் கேள்விகள் கேட்க வேண்டும் என்றார் அவர்.
இருப்பினும் தமிழ் இலக்கியம் என்பது கடைசி நிமிடத்தில் படிக்கக்கூடிய ஒரு பாடமும் அல்ல என்று வலியுறுத்தினார் அவர்.
முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைவுறுத்திய அவர், தொடக்கக் கல்லூரியில் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றைப் படிப்பதன்வழி தமிழ் மொழியை மேலும் ஆழமாக நேசிக்கலாம் என்றார்.

