என் பள்ளியின் முன்னாள் மாணவியான 19 வயது பூபாஷ்ரியுடன் சந்தித்துப் பேசியது சுவாரசியமான ஓர் அனுபவமாக எனக்கு அமைந்தது. 2019ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட நிலையில் இன்று ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி என்று அழைக்கப்படும் உயர்கல்வி நிலையத்திற்குச் சென்றார்.
அதையடுத்து அவர் தற்போது பொறியியல் துறையில் தன் படிப்பைத் தொடரவுள்ளார்.
உயர்நிலைப் பள்ளிக்கு வந்த புதிதில் தன்னுள் தயக்கமும் சந்தேகங்களும் ஓங்கி நின்றதாகக் கூறினார் பூபாஷ்ரி. இருப்பினும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
உயர்நிலைப் பள்ளியின் நான்கு ஆண்டுகளும் தனக்குச் சுமுகமாகச் சென்றதாக அவர் கூறினார். உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றதாக அவர் நினைவுகூர்ந்தார்.
உயர்தமிழ் வகுப்பு, இணைப்பாட வகுப்பு, போட்டிகள் என அனைத்திலும் ஆர்வம் காட்டியதுடன் தலைமைப் பொறுப்பை ஏற்று கல்வியில் சிறந்தும் விளங்கியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
படிப்பு என்று மட்டுமல்லாமல் தன் குணத்தையும் செதுக்கும் ஓர் இடமாக உயர்நிலைப் பள்ளி அமைந்ததென அவர் குறிப்பிட்டார்.
உயர்தமிழ் பயில்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், தமிழை மேலும் அதிகம் நேசித்ததாகக் கூறினார்.
உயர்நிலை 1, 2 ஆகிய நிலைகளில் அவரால் உயர்தமிழ் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் மனந்தளராமல் அவர் உயர்நிலை 3ல் உயர்தமிழ் பாடத்தை எடுத்தார். பல பள்ளிகள் பொதுவாக இதனை அனுமதிப்பதில்லை. உயர்நிலை 3ல் உயர்தமிழ் படிக்கலாம் என்ற வாய்ப்பை வழங்கு
வதில்லை. இருப்பினும் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இழக்கக்கூடாது என்
பதற்காக பூபாஷ்ரிக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.
அதுமட்டுமல்லாமல் தமிழ் போட்டிகள் பலவற்றில் அவர் கலந்துகொண்டார்.
அத்தகைய போட்டிகளில் ஒன்றுதான் 'சொற்களம்'. இதில் அவர் முக்கியப் பேச்சாளராக இடம்பெற்றதுடன் போட்டியின் காலிறுதிச் சுற்றுவரை அவரது அணி சென்றது.
போட்டிக்குத் தயார்செய்து வந்த நிலையில், ஆசிரியர்கள் அவருக்கு ஊக்குவித்துப் பெரும் ஆதரவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். போட்டி அனுபவத்தால் தன்னம்பிக்கை கூடியது என்று குறிப்பிட்ட அவர், தன் திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு அமைந்ததெனச் சொன்னார்.
பள்ளியில் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, பள்ளியில் பயிலரங்குகளையும் முகாம்களையும் ஏற்பாடு செய்ததன் மூலம் திட்டமிடும் ஆற்றலைத் தான் வளர்த்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கருத்தைக் கேட்டறிந்து பள்ளிச் சூழலைப் பள்ளி நிர்வாகம் மேம்படுத்தி வருவது தன்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் என்றார் பூபாஷ்ரி. உதாரணமாக பள்ளி உணவகத்தில் விற்கப்படும் உணவு குறித்து மாதந்தோறும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும். பொதுவாக மாணவர்
களுக்குப் பிடிக்காத ஓர் உணவை பள்ளி நிர்வாகம் உடனடியாக மாற்றிவிடும். மாணவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் பள்ளி முக்கியத்துவம் கொடுப்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மாணவர் நலனைக் கருத்தில் கொள்வது ஆகிய இரண்டிலும் பள்ளி கவனம் செலுத்தி வருவதால் பள்ளிச் சூழலை மேம்படுத்தவும் முடிகிறது மற்றும் மாணவர்களின் பண்புகளை வளர்க்கவும் முடிகிறது என்றார் பூபாஷ்ரி.
ஆசிரியர்களுடன் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பேசும் சுதந்திரமும் உள்ள நிலையில் ஆசிரியர்- மாணவருக்கிடையே நட்புணர்வு வளர்ந்ததாகக் கூறினார் அவர். மொத்தத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்த அந்த நான்கு ஆண்டுகள் தன்னை நல்ல மனிதராகச் செதுக்கி உள்ளதெனக் கூறினார் பூபாஷ்ரி.