மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டில் சிங்கப்பூர், தென்கொரியா கையெழுத்து

மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டில் சிங்கப்பூர், தென்கொரியா கையெழுத்து

2 mins read
6f01efa6-2b38-4cf2-ba92-58696371c50c
உடன்பாட்டில் கையெழுத்திட்ட தென்கொரிய வர்த்தக அமைச்சர் ஆன் டுக்குன் (இடது) சிங்கப்பூரின் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு புதிய உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருப்பதால், சிங்கப்பூரிலும் தென்கொரியாவிலும் உள்ள வாடிக்கையாளர்களும் வர்த்தகங்களும் மின்-கட்டணங்கள், காகிதமில்லா வர்த்தகம் போன்ற சுமூகமான மின்னிலக்க நடவடிக்கைகளால் பயனடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கையெழுத்திடப்பட்ட கொரிய-சிங்கப்பூர் மின்னிலக்க பங்காளித்துவ உடன்பாடு, அவ்விரு ஆசிய நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட முதலாவது மின்னிலக்க பொருளியல் உடன்பாடு.

சிலி, நியூசிலாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் இத்தகைய பங்காளித்துவ உடன்பாட்டை தென்கொரியாவுடன் செய்துகொண்டுள்ளது.

கொரிய-சிங்கப்பூர் மின்னிலக்க பங்காளித்துவ உடன்பாட்டின் கீழ், இரண்டு நாடுகளும் தங்களின் மின்னிலக்க விதிமுறைகள் மற்றும் தரங்களை ஒருமுகப்படுத்துவதில் பணியாற்றி, தங்களுக்கிடையிலான இயங்கக்கூடிய தன்மையை மேம்படுத்தும்.

இதன் மூலம் எல்லை தாண்டிய தரவு பரிமாற்றம் விரைவுப்படுத்தப்படுவதுடன் வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் ஒரு நம்பிக்கையான, பாதுகாப்பான மின்னிலக்க சுற்றுச்சூழலை ஏற்படுத்தவும் முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்தது.

தென்கொரிய வர்த்தக அமைச்சர் ஆன் டுக்குன் சிங்கப்பூரின் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் கையெழுத்திட்ட உடன்பாடு முன்னதாக 2021 டிசம்பரில் நிறைவடைந்தது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு, மின் கட்டண முறை, செயற்கை நுண்ணறிவு உட்பட இதர வளரும் அம்சங்களில் இருதரப்பு ஒத்து ழைப்பை வலுப்படுத்தவும் உடன்பாடு வகை செய்கிறது.

சிங்கப்பூரும் தென்கொரியாவும் பல்லாண்டுகளாக வர்த்தக தொடர்புகளையும் மக்கள் பரிமாற்றத் திட்டங்களையும் வலுப்படுத்திக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்த டாக்டர் டான், "நமது பொருளியல் ஒத்துழைப்பு பல பகுதிகளில் விரிவடைந்துள்ளது," என்றார்.

"சிங்கப்பூரும் தென்கொரியாவும் விரைவான பொருளியல் வளர்ச்சியை, வெளிப்படைத்தன்மையாலும் புத்தாக்கத்தாலும் ஆகக் கடைசி பங்காளித்துவ ஒத்துழைப்பாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளன," என்றார் திரு ஆன் டுக்குன்.

சிங்கப்பூரும் தென்கொரியாவும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துதல், அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வெளிநாட்டு விநியோகிப்பாளர்களுடன் இணைக்கும் திட்டங்களில் நிறுவனங்கள் பங்கேற்றல் போன்றவற்றிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.