உலகின் முதல் செயற்கை மாமிச புத்தாக்க நிலையம்

உலகின் முதல் செயற்கை மாமிச புத்தாக்க நிலையம்

2 mins read
637731f8-0bec-493d-a7b6-d70d3b7c0f85
புத்தாக்க நிலையத்தின் உருவாக்கம், 'மீட்டபல்' நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகியவற்றால் வரும் ஆண்டுகளில் 50க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. படம்: மீட்டபல் -

இன்னும் சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் செயற்கை மாமிசப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவு வகைகளைச் சுவைத்து மகிழலாம்.

அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் சிங்கப்பூரில் திறக்கப்பட இருக்கும் செயற்கை மாமிச புத்தாக்க நிலையத்தால் இது சாத்தியமாகிறது.

இங்கு அமையவிருக்கும் இந்த நிலையம் உலகின் முதலாவது செயற்கை மாமிச புத்தாக்க நிலையம் என்று கூறப்படுகிறது.

நெதர்லாந்தின் செயற்கைப் பன்றி இறைச்சி நிறுவனமான 'மீட்டபல்', உள்ளூரில் இருக்கும் 'லவ் ஹெண்டல்' எனும் தாவரம் சார்ந்த செயற்கை இறைச்சி உற்பத்தி நிறுவனமும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.

வரும் 2024ஆம் ஆண்டுக்குள், 'மீட்டபல்' நிறுவனமும் 'லவ் ஹெண்டல்' நிறுவனமும் தங்கள் செயற்கை மாமிசப் பொருள்கள் உணவகங்களில் பரிமாறப்படும் என்றும் 2025க்குள் பேரங்காடிகளில் விற்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தன.

ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய புத்தாக்க நிலையத்தில் வாடிக்கையாளர்களும் உணவக உரிமையாளர்களும் அமர்ந்து கலப்பின செயற்கை மாமிச உணவு வகைகளைச் சுவைத்து பார்க்கவும் முடியும்.

அந்த நிலையத்தில் சில்லறை விற்பனைப் பகுதியும் இருக்கும் என்று 'மீட்டபல்' நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது.

நிலையத்தின் உருவாக்கம், 'மீட்டபல்' நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகியவற்றால் வரும் ஆண்டு களில் 50க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்படும்.

அவற்றில் உயிரணு மற்றும் உணவு உயிரியலாளர்கள் போன்ற வேலைகளும் அடங்கும் என்று கூறிய அந்நிறுவனத்தின் வர்த்தக அதிகாரி கெரலைன் வில்ஸ்சுட், இந்தப் புதிய புத்தாக்க நிலையம் எங்கு அமையவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.