டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மார்ச் வரை விநியோகச் சேவை வழங்கலாம்

டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மார்ச் வரை விநியோகச் சேவை வழங்கலாம்

1 mins read
f2460939-ada5-4422-9bfb-358ac9cfa71d
-

டாக்சி ஓட்டுநர்களும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை உணவு மற்றும் பொருள் சேவை விநியோகச் சேவைகளில் தொடர்ந்து ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படுவது இது மூன்றாவது முறை.

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டவுடன் விநியோகச் சேவைகளுக்கான தேவை அதிகளவில் குறைந்துவிட்டது.

இருப்பினும், இந்தக் காலக்கெடு நீட்டிப்பு, விநியோக ஊழியர்கள் தங்கள் வருமானத்தை ஈடுகட்ட மாற்றுவழிகளைச் சிந்திக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இந்தச் சோதனைத் திட்டம் 2020 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 9,500 டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் விநியோகச் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது கடந்த முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட 2020 மார்ச்சிலிருந்து 2021 ஆகஸ்ட் வரையிலான மாதாந்திர எண்ணிக்கையான 17,500 ஓட்டுநர்கள் என்ற எண்ணிக்கையில் 46 விழுக்காடு சரிவு என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் விவரித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் முடிவு, தற்போதுள்ள விநியோக ஏற்பாடுகளைக் கொண்ட டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் அதை நிறைவேற்றிக் கொண்டு கூடுதல் வருமானத்தைப் பெற வழிவகுக்கிறது.

அதேவேளையில், பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் இருப்பதை இது உறுதி செய்கிறது என்று ஆணையம் தெரிவித்தது.