வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவ சிறுவர் படை இலக்கு

வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவ சிறுவர் படை இலக்கு

1 mins read
cb15ab98-4945-4a78-b3eb-6976a57ee1ad
-

தீவெங்கும் 43,000க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்குச் சிறுவர் படை உதவிக்கரம் நீட்டுகிறது. மெதுவடையும் பொருளியல் வளர்ச்சி, உயரும் விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களைச் சிறுவர் படையினர் விநியோகிக்கின்றனர்.

'ஷேர் எ கிஃப்ட்' 2022 எனும் திட்டம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இந்தத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டு களாக நிறுத்திவைக்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் உதவி செய்ய விரும்புவோர் அங் மோ கியோ ஹப், பிடோக் மால் கடைத்தொகுதி, தாம்சன் பிளாசா, ஜூரோங் பாயிண்ட் ஆகிய இடங்களில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குச் சென்று உணவுப் பொருள்களை நன்கொடை வழங்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் மூலம் ரொக்க நன்கொடை மட்டுமே ஏற்கப்பட்டது.

கிட்டத்தட்ட 34,803 குடும்பங்களுக்கு உதவி செய்யவும் மேலும் 8,500 குடும்பங்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

திட்டத்தின் தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், "கொவிட்-19 நெருக்கடிநிலையைத் தவிர்த்து உக்ரேன் போர், உணவு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு, மெதுவடைந்துள்ள பொருளியல் வளர்ச்சி, உயரும் விலைவாசி ஆகியவற்றால் உலகளாவிய பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல. எனவே, தற்போதைய சூழலில் ஒருமைப்பாட்டு உணர்வை நீட்டிப்பது மிகவும் அவசியம். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திதான் கொவிட்-19 நெருக்கடிநிலையை சிங்கப்பூர் கடந்து வந்துள்ளது," என்றார்.