சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த லெஃப்டினன்ட் கர்னல் ஒருவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள தங்குவிடுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஒரு பெண்ணைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
'சினூக்' உட்பட ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவமுள்ள 45 வயது நியோ ஏக் சியாவ், நவம்பர் 13 அன்று அதிகாலை 2 மணியளவில் இக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் ஆகாயப்படை குற்றம் சுமத்தப்பட்டவரை அனைத்துப் பணிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்துவிட்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துவருவதால் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இந்த வழக்கு தொடர்பில் மேற்கொண்டு கருத்து ஏதும் கூற இயலாது என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
குற்றவியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் நியோமீது நவம்பர் 15ஆம் தேதி அன்று சுமத்தப்பட்டன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் நவம்பர் 13 அன்று 18, 21 வயதுகளுடைய இரண்டு பெண்களின் அறைகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
வளாகத்தினுள் நியோ எவ்வாறு புகுந்தார் என்பது குறித்துத் தகவல் அறியப்படவில்லை.
இந்நிலையில், 21 வயது பெண்ணின் இடது தொடையை வருடி அவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களையும் தங்குமிடம் பற்றிய விவரங்களையும் வெளியிட முடியாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பே தங்களது தலையாய முன்னுரிமை என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. மேலும் இந்த அத்துமீறலை மிகவும் கடுமையாக எடுத்துக்கொள்வதாகவும் பல்கலைக்கழகம் விளக்கியது.
சம்பவத்தை அடுத்து, காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் ஆதரவு நல்கியதாகவும் குறிப்பிட்டது.
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டது.
நியோவின் வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மானபங்கம் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் புரிந்தவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இதில் ஏதேனும் இரண்டு, மூன்று தண்டனைகள் விதிக்கப்படலாம்.

