சிங்கப்பூர் ரயில் கட்டமைப்புகளின் 35 ஆண்டு வரலாற்றைப் பற்றியும் ரயில் செயல்படும் முறையைப் பற்றியும் பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ள மண்டாய் பணிமனையில் புதிய கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.
'சிங்கப்பூர் ரயில் டிஸ்கவரி செண்டர்' (எஸ்ஆர்டிசி) என்ற பெயருடைய அந்த நிலையம், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஆதரவில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்புகளின் பயணத்தைக் காண்பிப்பதோடு இளம் தலைமுறையினர் ரயில் தொழில்துறை பற்றி மேலும் தகவல் அறிந்திட நிலையம் வழிவகுக்கும்.
மக்கள் குழுக்களாக முன்பதிவு செய்தபின்னரே நிலையத்திற்கு வருகையளிக்க முடியும். பள்ளிகளும் இதர அமைப்புகளும் நிலையத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினால் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தை outreach@smrt.com.sg என்ற மின்னஞ்சலில் அணுகலாம்.
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள கண்காட்சி நிலையத்தில் ரயில் தொழில்துறையின் எதிர்காலத்தைப் பற்றியும் அதன் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும் வருகையாளர்கள் அறிந்திட முடியும்.
ரயிலை ஒரு தடத்திலிருந்து மற்றொரு தடத்திற்கு மாற்றும் அனுபவத்தை ஒருவர் மெய்நிகர் பாணியில் பெறுவதற்கான அதிநவீன அம்சங்களும் நிலையத்தில் உள்ளன.
ரயிலில் கோளாறு ஏற்படும்போது அதைச் சமாளிப்பது தொடர்பான விளையாட்டையும் வருகையாளர்கள் விளையாடிப் பார்க்கலாம்.
முதல் ரயில் கேப்டன் சீருடை, கண்காட்சியில் இடம்பெறுகிறது. ரயில் கட்டமைப்புகள் அடைந்துள்ள மைல்கல்களைப் பற்றிய தகவல்களும் இருவழித்தொடர்புடைய திரையினில் ஒரு கையசைவில் கிடைக்கும்.
தொடக்கவிழாவுக்கு போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வருகையளித்திருந்தார். சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் யோசனை 1960களில் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.
முற்றிலும் பேருந்தைச் சார்ந்த ஒரு போக்குவரத்துக் கட்டமைப்புக்கு எதிராக ரயில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்து கடுமையான விவாதங்களும் நடந்ததாக அவர் கூறினார். இறுதியில், 1982ல் ரயில் அடிப்படையிலான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு ஒன்றில் முதலீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டில் முதல் ஐந்து எம்ஆர்டி நிலையங்கள் செயல்படத் தொடங்கின. தற்போது ஆறு எம்ஆர்டி, இரண்டு எல்ஆர்டி பாதைகளில் மொத்தம் 192 நிலையங்கள் அமைந்துள்ளன என்றார் அமைச்சர்.

