விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மருத்துவமனையில்
லோர்னி சாலையை நோக்கிச் செல்லும் பிரேடல் சாலையில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய இருவர் நேற்றுக் காலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 26 வயது பெண், அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி, 65 வயதான சிற்றுந்து ஓட்டுநர் ஆகியோர் விபத்தில் சிக்கியதாக காலை 8.20 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிற்றுந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
77,500 பாக்கெட் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்
துவாஸ் சோதனைச் சாவடியில் 77,500 பாக்கெட் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) கைப்பற்றியது. இந்த ஆண்டில் பிடிபட்ட ஆக அதிகமான கள்ள சிகரெட்டுகள் இவை. இந்த வரி செலுத்தா சிகரெட்டுகள் கிட்டத்தட்ட $64,774.50 பெறுமானமுள்ளது என்று ஆணையம் கூறியது. மேலும் அக்டோபர் 20ஆம் தேதி அன்று 1,360 கிலோ மெல்லும் புகையிலையை அதிகாரிகள் கண்டுபிடித்துக் கடத்தல் முயற்சியை முறியடித்தனர். மலேசிய லாரி ஒன்றில் இருந்த மற்ற பொருள்களுக்கு இடையே இந்த சட்டவிரோத பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று திங்களன்று ஆணையம் வெளியிட்ட 'டிக்டாக்' காணொளி மூலம் தெரியவந்துள்ளது. படம்: ஐசிஏ

