சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினரான ஜெனிஸ் கோ, கடந்த ஜூலை மாதம் தமது நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டதாக இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
48 வயதான அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் தமக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி இருந்தார்.
"தொடக்கத்தில் நாக்கில் சிறிய புண் ஏற்பட்டபோது அதனை அலட்சியப்படுத்திவிட்டு எனது வேலை
களைத் தொடர்ந்தேன். அது பின்னர் கடுமையான விளைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த மூன்று மாதங்களில் கீமோ கதிரியக்க சிகிச்சைக்குச் சென்றதாகவும் இரு முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்," என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதன் காரணமாக பேசுவதிலும் சாப்பிடுவதிலும் சிரமம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த 'த கேன்சர் சென்டர்' என்னும் மருத்துவ நிலையத்தின் இயக்குநரும் புற்றுநோயியல் ஆலோசகருமான டாக்டர் வோங் செங் வெங், நாக்குப் புற்றுநோய் என்பது சிங்கப்பூரில் அரிதான ஒன்று என்றும் இங்குள்ள ஆண், பெண்களிடையே கண்டறியப்படும் முதல் பத்து புற்றுநோய்களில் இது இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
"சிங்கப்பூரில் ஆண்டுக்கு 80 பேர் நாக்குப் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் நோயாளிகளைக் காட்டிலும் அதிகமான வெளிநாட்டவரே இதனால் பாதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்," என்றார் அவர்.
சிங்கப்பூர் பொது மருத்துவ
மனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் லிம் சுவீ மிங், ஆண்டுதோறும் 30 முதல் 40 புதிய நாக்குப் புற்றுநோயாளிகள் தமது மருத்துவமனையில் பதிவுசெய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இங்கு 411 நாக்குப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவானதாக சிங்கப்பூர் புற்றுநோய்த் தடுப்புச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு விழா மலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

